Last Updated : 02 Dec, 2020 01:53 PM

 

Published : 02 Dec 2020 01:53 PM
Last Updated : 02 Dec 2020 01:53 PM

கேரளாவில் வேகமாகப் பரவும் தென்னை வேர் வாடல் நோய்: எல்லையோரத் தமிழக மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு

தென்னை வேர் வாடல் நோய் கேரளாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் எல்லையோரத் தமிழக மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 87,749 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பாசன வசதியின்மை, வறட்சி, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலால் தென்னை விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வேர் வாடல் நோய் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்துத் தென்னை விவசாயிகள், “மரங்கள் மடிந்து போகாவிட்டாலும், வாட்டமாகக் காணப்படுவதால் காய்களின் எண்ணிக்கையும், தரமும் குறைந்து வருகிறது. அனைத்து வயதுத் தென்னை ரகங்களிலும், மண் வகைகளிலும் இந்நோய் பாதிப்பு காணப்படுகிறது. இளங்கன்றுகளில் பூக்கும் தருணம் தள்ளிப் போவதுடன், இலைகள் அழுகிக் காய்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் ஆரம்பத்தில் 35 சதவீதமும், முற்றிய நிலையில் 85 சதவீதமும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது” என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தென்னை மரங்களை ஆய்வு செய்த கோவை வேளாண்மைத் துறையினர், வேர் அழுகல் நோயில் இருந்து தென்னை மரங்களைப் பாதுகாக்க, நோய்க் கட்டுப்பாட்டு முறைகளையும், ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்துக் கோவை வேளாண்மைத் துணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி கூறியதாவது:

''அண்டை மாநிலமான கேரளாவின் எல்லைப் பகுதியையொட்டி அமைந்துள்ள கோவை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்னையில் வேர் அழுகல் நோய் பாதிப்பு தென்படுகிறது. பைட்டோபிளாஸ்மா என்ற நுண்ணுயிரியால் இந்நோய் உண்டாகிறது.

மரத்துக்கு மரம் சென்று சாறு உறிஞ்சும் தத்துப்பூச்சிகள் மற்றும் கண்ணாடி இறக்கைப் பூச்சிகளால் இந்நோய் பரவுகிறது. நோய் பாதிக்கப்பட்ட தென்னை மரத்தின் கீற்றுகள், கீழ் நோக்கி வளைந்து காணப்படும். நடுவில் உள்ள கீற்றுகள் மஞ்சள் நிறமாக மாறி, ஓரங்கள் கருகி, பின்னர் உதிர்ந்து விடும்.

குருத்து கருகுதல், மொட்டு உதிர்தல், வேர் அழுகுதல் போன்ற பாதிப்புகள் மரங்களில் காணப்படும். குரும்பைகள் கொட்டுதல், மட்டைகள் மற்றும் தேங்காய்ப் பருப்புகளின் தடிமன் குறைதல், நீர் மற்றும் தாது உப்புகள் உறிஞ்சும் திறன் குறைந்து காணப்படுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். எண்ணெய்ச் சத்து குறைவதால், திசுக்கள் சுருங்கிவிடும்.

இதைக் கட்டுப்படுத்தப் பத்துக்கும் குறைவாகக் காய்க்கும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட வேண்டும். இதனால் மரத்துக்கு மரம் பரவுவது தடுக்கப்படும். மரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க தொழு உரம் 50 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ, சூடோமோனாஸ் 200 கிராம், யூரியா 1.5 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ, மெக்னீசியம் சல்பேட் 1 கிலோ என்ற அளவில் மரத்திற்கு இட வேண்டும்.

வட்டமான பாத்தியில் பசுந்தாள் உரங்களான தட்டைப்பயிர், சணப்பை, கலப்பகோணியம், பியூரேரியா, தக்கைப்பூண்டு ஆகியவற்றை ஏப்ரல், மே மாதங்களில் தென்னந்தோப்புகளில் பயிரிட்டு, பூக்கும் முன் உழுதுவிட வேண்டும். வேப்பம் புண்ணாக்கு பவுடர் 250 கிராமை, அதே அளவு மணலுடன் கலந்து குருத்து மற்றும் தண்டுகளில் இட வேண்டும். அல்லது டைமீதோபேட் 1.5 மி.லி. மருந்தை, 1 மி.லி. ஒட்டும் திரவத்துடன் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மாத இடைவெளியில், இருமுறை தெளிக்க வேண்டும்''.

இவ்வாறு கோவை வேளாண்மைத் துணை இயக்குநர் சித்ராதேவி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x