

சிறப்பு பட்டத்துக்கான அரவையை தனியார் கரும்பாலை தொடங்கா மல் உள்ளதால், கரும்புகள் வெட்டப் படாமல் காய்ந்து நஷ்டம் ஏற்பட் டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாலங் காடு கூட்டுறவு ஆலையில் கரும்பு வழங்க உடனடியாக அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரத்தில் செயல்பட்டு வரும் தனி யார் சர்க்கரை ஆலையில், உத்திர மேரூர், காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த விவசாயிகளும் வேலூர் மாவட்ட விவசாயிகளும் கரும்பு வழங்கி வருகின்றனர். இந் நிலையில், கடந்த 2014-15ம் ஆண்டு சீசனில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.11 கோடி நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை.
இதனால், சிறப்பு பட்டத்தில் விளைந்து அறுவடைக்கு தயாராக நிற்கும் கரும்புகளை, தனியார் ஆலைக்கு வழங்க விவசாயி களுக்கு விருப்பம் இல்லை. தனியார் ஆலை நிர்வாகமும் நஷ்டத்தை காரணம் காட்டி அறுவடைக்கான நடவடிக்கைகளை மேற்கொள் ளாமல் உள்ளது. கரும்புகள் காய்ந்து, நீர்ச்சத்தை இழப்பதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கரும்பு விவசாயி கஜேந்திரன் கூறியதாவது: சிறப்பு பட்ட கரும்புகளை 12 மாத காலத் தில் அறுவடை செய்ய வேண்டும். சிறப்பு பட்ட சீசன் முடிந்து 2 மாத காலம் கடந்தும், தனியார் ஆலை நிர்வாகம் அறுவடையை தொடங்காமல் உள்ளது. இதனால், அறுவடைக்கு தயாராக உள்ள 20 ஆயிரம் டன் கரும்புகள், வெட்டப் படாமல் காய்ந்து நீர்ச் சத்தை இழந்து வருகின்றன. திருவாலங்காடு கூட் டுறவு ஆலைக்கு கரும்பு வழங்க அனுமதிக்குமாறு, சர்க்கரைத் துறை இயக்குநரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்
இதுகுறித்து, சர்க்கரைத்துறை இயக்குநர் மகேசன் காசிராஜனிடம் கேட்டபோது: கரும்புகளை அறுவடை செய்வதாக, தனியார் ஆலை நிர்வாகம் சர்க்கரைத் துறை ஆணையத்தில் பதிவு செய்துள்ளது. அறுவடைக்கு பதிவு செய்தால், ஆலை நிர்வாகம் கட்டாயம் அரவை செய்தாக வேண்டும். இதுதொடர்பாக, தனியார் ஆலையிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மாற்று ஆலை கேட்கும் விவசாயிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக, தனியார் ஆலை நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது, ஆலை நிர்வாகம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.