

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் நேற்று முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்று (டிச.2) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, நேற்று (டிச.1) மாலை அவரது இல்லத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் கே.சுப்பராயன் எம்.பி., செயற்குழு உறுப்பினர்கள் நா.பெரியசாமி முன்னாள் எம்எல்ஏ, எம்.ஆறுமுகம் முன்னாள் எம்எல்ஏ மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் பி.எல்.சுந்தரம் முன்னாள் எம்எல்ஏ ஆகியோர் நேரில் சந்தித்து கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த மார்ச் 16-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தபடி மாதாந்திர ஊதியத்தை ரூ.3,600 ஆக உயர்த்தவும், குடிநீர் விநியோகப் பணியாளர்களுக்கு ரூ.4,000 ஆகவும் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட வேண்டும். இப்பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அரசின் ஆரம்பப் பள்ளிகளில் பயின்று வரும் அறிவுக் கூர்மையுள்ள மாணவர்களைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கவும், அதற்கான கட்டணங்களைக் கட்டுமானத் தொழிலாளர் வாரியம் செலுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டிருப்பது அரசுப் பள்ளியின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும் என்பதால் இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செய்யப்படும் மதுபான சில்லறை விற்பனைப் பிரிவுப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்து, ஊதிய நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையில் மதுபானங்கள் விற்பனை செய்ய, கேரள மாநிலத்தில் உள்ளதுபோல் மதுபான விற்பனைக் கடைகளையும், பணியாளர் பணிநிலைகள், ஊதியம் போன்றவற்றைத் திருத்தியமைக்க வேண்டும். டாஸ்மாக் பணியாளார்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் அவர்களை இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்கவும் வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தாய்- சேய் நலன் காக்கும் திட்டதின் உயிர்நாடியாகச் செயல்படும் ஆஷா பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை பல மாதங்கள் வழங்கப்படவில்லை. இவர்களது பணியை நிரந்தரமாக்கவும், காலமுறை ஊதியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.
ஏரி, குளங்கள் பராமரிப்பு, சாலைகள் மேம்பாடு திட்டங்கள் செயலாக்கம் குறித்தும் பேசப்பட்டது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.