Published : 02 Dec 2020 10:44 AM
Last Updated : 02 Dec 2020 10:44 AM

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்; எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்துக்காக நடத்தப்படுகிறது: ஜி.கே.வாசன் விமர்சனம்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விவசாயிகள் போராட்டம் எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக நடத்தப்படுகிறது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (டிச.2) வெளியிட்ட அறிக்கை:

"டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விவசாயிகள் போராட்டம் திட்டமிட்டு அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகளால் நடத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு குறுகிய கால நன்மையைக் கூறி அவர்களின் வருங்காலத் தொடர் வளர்ச்சியை, வருமானத்தை எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரத்தின் மூலம், தவறான செய்திகளைப் பரப்பி விவசாயிகளைத் திசை திருப்ப நினைக்கக் கூடாது. அப்பாவி விவசாயிகள் இதற்குப் பழியாகக்கூடும்.

புதிய வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்திருப்பதால் குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கும் திட்டம் நிறுத்தப்படும் என்று எதிர்க்கட்சியினர் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். இது உண்மைக்குப் புறம்பானது. குறைந்தபட்ச ஆதார விலை உறுதியாகக் கிடைக்கும் என்று மத்திய அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது. எனவே, குறைந்தபட்ச விலை கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கையோடு இருக்கலாம்.

குறிப்பாக, புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்கவும், விவசாய விளைபொருட்களை நாட்டின் எந்த மூலையிலும் விவசாயிகள் விற்று பயனும், லாபமும் அடையலாம் என்பதும்தான் சாராம்சம்.

அதாவது, இந்தப் புதிய சட்டத்தின்படி விவசாயிகள் நேரடியாகச் சந்தையில் விளைபொருட்களை விற்கலாம் மற்றும் உற்பத்திப் பொருள்களை விற்கும்போது இடைத்தரகர்களால் பாதிக்கப்படமாட்டார்கள்.

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும்பயன் தருவதோடு விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலுக்கும் பாதுகாப்பு கொடுக்கக்கூடிய வகையில் அமையும்.

எனவே, எதிர்க்கட்சியினர் ஏதேனும் அரசியல் செய்ய நினைத்தால் பொதுமக்களுக்குக் குறிப்பாக விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கலாமே தவிர தேவையற்ற போராட்டத்திற்குக் காரணமாக அமைந்துவிடக்கூடாது.

பொதுவாக, எதிர்க்கட்சிகளுடைய அரசியல் லாபத்திற்கு அப்பாவி விவசாயிகள் பலிகடா ஆகிவிடக்கூடாது; ஏமாந்து போகக்கூடாது என்று தமாகா சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x