Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

கூட்டணி அமைத்து கொத்தடிமையாக இருக்க முடியாது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து

கூட்டணி அமைத்து வாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருக்கமுடியாது என்று மக்கள் நீதி மய்யம்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். அக் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவுக்கு தலைமை அலுவலக பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார். அவருக்குபொதுச் செயலாளர் (தலைமைஅலுவலகம்) பதவி வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்த புரத்தை சேர்ந்த சந்தோஷ் பாபு,1995-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்தார். கிருஷ்ணகிரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றியவர். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மை செயலாளராக பணியாற்றினார். 8 ஆண்டுகள் பணிக்காலம் உள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.

நேர்மையான தலைவர் வேண்டும்

செய்தியாளர்களிடம் சந்தோஷ் பாபு கூறும்போது, ‘‘பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் எனக்கு அழுத்தம் இருந்ததால், ஓய்வு பெறுவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே விருப்ப ஓய்வு பெற்றேன். நேர்மையான தலைவர் ஒருவர் வேண்டும் என்பதால் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளேன்’’ என்றார்.

பாஜகவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, காங்கிரஸில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஏற்கெனவே இணைந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த பதில்.

பிரச்சாரப் பயணத்தை எப்போது தொடங்குகிறீர்கள்?

பொது ஆரோக்கியம் கருதி அதை வேறு பாணியில் அணுக முடிவு செய்து சற்று தள்ளி வைத் துள்ளோம். தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

கூட்டணி குறித்த பேச்சு தொடங்கிவிட்டதா?

கூட்டணி அமைத்துவிட்டு, வாழ்நாள் முழுவதும் கொத்தடி மையாக இருக்க முடியாது. கூட்டணி இன்றி தனித்து நிற்க வேண்டும் என்பதே எல்லா கட்சிகளின் ஆசை. அதற்கு மக்கள் நீதி மய்யமும் விதிவிலக்கு அல்ல.

ரஜினிக்கு பதிலடியா?

நிர்வாகிகளை ரஜினி சந்தித்த நிலையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை இணைத்துக் கொண்டுள்ளீர்கள். இது ரஜினிக்கு பதிலடியா?

யாருக்கும் பதிலடி கொடுப்பது இல்லை. நாங்கள் பதிலடி கொடுப்பது 2021 சட்டப்பேரவை தேர்தலில்தான். கட்சியில் இணைவதாக 6மாதங்களுக்கு முன்பே எண்ணினார் சந்தோஷ் பாபு. அது தற்போதுஅமைந்துள்ளது. நேர்மையாளர்கள், வல்லவர்கள், திறமையாளர்கள் மூச்சு விடுவதற்கு ஏற்ற சூழலைஉருவாக்குவதுதான் என் முதல் கடமை. அதற்கேற்ற ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்.

கரோனா, புயல் முன்னெச் சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடு பற்றி..

எனக்கு திருப்தி இல்லை. சமுதாயக் கோபத்தை நான் அடக்க மாட்டேன். நம்மை ஊழல் தாக்கிக்கொண்டிருக்கிறது. எந்த துறையில்ஊழல் இருக்கிறது என்பது முக்கியம் அல்ல. எங்கிருந்தாலும் அது மாற வேண்டும்.

விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை குறித்து..

இதை அஜாக்கிரதையாக விடக்கூடாது. இது மேலும் மேலும் பலமாக ஒலிக்க விடுவது நாட்டுக்கு நல்லதல்ல. எனவே, கட்சி வடிவம், கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் தலைவர்களாக இருந்து விவசாயிகளுடன் பேச வேண்டும்.

தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா?

பிரச்சாரத்தின்போது வீடு வீடாகச் செல்லப்போகும் நான், நண்பன் வீட்டுக்கு செல்லாமல் விடுவேனா?

ரஜினி அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக இருப்பாரா?

திரைத் துறையில்கூட நாங்கள் போட்டியாளராக இருந்தோமே தவிர, பொறாமைக்காரர்களாக இல்லை. வருங்காலத்தில் போட்டியாளராக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அரசியல் பிரவேசத்தைவிட அவரது ஆரோக்கியம்தான் எனக்கு முக்கியம்.

இவ்வாறு கமல் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x