Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: 3,000 மீனவர்களை மீட்க கர்நாடகா, கேரளாவுக்கு விரைந்தது அதிகாரிகள் குழு

நாகர்கோவில்/ தூத்துக்குடி/ ராமேசுவரம்

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்ராசி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, இலங்கை திரிகோணமலை பகுதியில் கரையைக் கடக்கும். பின்னர் நாளை (டிச.3) காலை தென்தமிழக கடல் பகுதியை நெருங்கும். அவ்வாறு உருவாகப்போகும் புயலுக்கு 'புரெவி' என பெயரிடப்பட்டுள்ளது.

இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யும். மேலும், மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 3 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இம்மாவட்டங்களின் ஆட்சியர்கள் தலைமையில் தீவிர முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையின் தலா 20 பேர் கொண்ட 9 அணியினர் வந்துள்ளனர். தாழ்வான பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி தங்க வைப்பதற்காக, குமரி மாவட்டத்தில் 75 தற்காலிக முகாம்கள், தூத்துக்குடியில் 63 முகாம்கள், நெல்லையில் கடலோரப் பகுதியில் 8 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வழியாக செல்லும்தாமிரபரணி ஆற்றில் குளிக்க இன்றும், நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 13 அணைக்கட்டுகள், குமரியில் உள்ள 6 அணைக்கட்டுகளும் போதிய நீர் இருப்புடன் உள்ளதால், அவை தீவிர கண்காணிப்பில் உள்ளன. வருவாய்த் துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு படையினர், வேளாண் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், நேற்று மாலை வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழையில்லை. நேற்று பகலில் நன்கு வெயில் அடித்தது.

ராமேசுவரம்

புயலை முன்னிட்டு மண்டபம், ராமேசுவரம் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 300-க்கும் விசைப்படகுகள் பாதுகாப்பு கருதி பாம்பன் பாலத்தைக் கடந்து குருசடைத் தீவு அருகே நேற்று நிறுத்தப்பட்டன. புதிய புயல் உருவாக உள்ளதைத் தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் எச்சரிக்கைக் கூண்டு நேற்று ஏற்றப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகளை அருகிலுள்ள பிற மாநில மீன்பிடி துறைமுகங்களில் கரைசேர்ப்பதற்கான முயற்சியில் மீன்வளத் துறையினர் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டனர். இதன்படி, நேற்று முன்தினம் 92 விசைப்படகுகள் குஜராத் மற்றும் மும்பை துறைமுகங்களில் கரை ஒதுங்கின.

மேலும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 170 படகுகள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 40 படகுகள் என 210 படகுகள் வயர்லெஸ் தொலைத்தொடர்பும் கிடைக்காத வகையில் 100 கடல் மைல் தொலைவையும் கடந்து லட்சத்தீவுப் பகுதிகளில் மீன்பிடிப்பதாக மீன்வள துறைக்குத் தகவல் கிடைத்தது.

அதனால் 210 படகுகள், அதில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்களையும் செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மீட்க தமிழக மீன்வளத்துறை முடிவு செய்தது. இவர்கள்240 கடல் மைல் தொலைவு வரை மீன்பிடிப்பதால் அருகிலுள்ள துறைமுகங்களுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக கடலூர் மீன்வளத் துறை துணை இயக்குநர் காத்தவராயன் தலைமையில் ஒரு அதிகாரிகள் குழுவினர் கர்நாடக மாநிலம் மங்களூர் துறைமுகத்துக்கும், மற்றொரு துணை இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கேரள மாநிலம் கொச்சிக்கும் விரைந்துள்ளனர்.

இந்த அதிகாரிகள் அங்கிருந்து செயற்கைக்கோள் கைபேசி வைத்துள்ள ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளைத் தொடர்பு கொண்டு புயல் எச்சரிக்கையைத் தெரிவித்து உடனடியாக கரை திரும்ப நடவடிக்கை எடுப்பர். அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற 24 படகுகளும் கரை திரும்பி மூக்கையூர் மற்றும் குந்துகால் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x