

சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
கரோனா தொற்று பரவலைதடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி தொற்று நோய் சட்டம் மற்றும் 144 குற்றவியல் நடைமுறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், சென்னை காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தடையை மீறி எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. சாலைகள், தெருக்கள் மற்றும் திறந்தவெளிகள் என, எந்த இடத்திலும் வரும் 31-ம் தேதிவரை அவசியமின்றி கூட்டமாக கூடக் கூடாது. இதை மீறுவோர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆணை பொது மக்கள் நலன், பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலை நாட்டும் பொருட்டு தற்போது பிறப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.