

தமிழ்நாட்டில் வரும் ஜனவரி மாதம் 10 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்க இருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை அடுத்த மங்கலம் கிராமத்தில் அதிமுக சார்பில்நிவர் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்டச் செயலர் ஆறுமுகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் உட்பட ரூ.6 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார். இதில், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது: தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் 10 இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்பட உள்ளன. ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 10 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்வது இதுவே முதல் முறை.
பாமகவினர் சில கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சட்ட விதிகளுக்கு புறம்பாகபோராட்டங்களை மேற்கொண்டால் பாமகவினர் மீது அரசு தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டதன் மூலம் மிகப்பெரிய உருமாற்றத்தை பாலாறு அடைந்துள்ளது. முதல்வர் ஏற்கெனவே அறிவித்த 7 தடுப்பணைகளும் பாலாற்றில் கட்டப்படும் என்றார்.