

கடலூர் மாவட்டத்தில் உழவர்- அலுவலர் தொடர்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு உழவர்களுக்கும் விரிவாக்க அலுவலர்களுக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்தும் விதமாக உழவர் - அலுவலர் தொடர்பு திட்டம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் நவீன வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் உழவர் நலன் காக்கும் மானியத் திட்டங்களை வேளாண்துறை அதிகாரிகள் விளை நிலங்களுக்கே சென்று விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்குவர்.
முன்னோடி விவசாயிகளுக்கு பயிற்சி
இத்திட்டத்தின் மூலம் , வேளாண் அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், துணை வேளாண் அலுவலர்கள் மற்றும் வேளாண் உதவி இயக்குநர் ஆகியோர் கிராம ஊராட்சிகளுக்கு நேரடியாக சென்று விவசாயிகளை சந்திக்கும் பயணத் திட்டத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகளை தெரிவு செய்து அவர்களுக்கு பல்வேறு நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு மானியத் திட்டங்கள் குறித்த விளக்கங்களும், பயிற்சிகளும் உரிய கால இடைவெளியில் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது.
பயிற்சி பெற்ற முன்னோடி விவசாயிகள் வேளாண், தோட்டக்கலை துறைக்கும் மற்ற விவசாயிகளுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட வேண்டும். அலுவலர்கள் கிராம ஊராட்சிகளுக்கு செல்வதையும் முன்னோடி விவசாயிகளுக்கு வேளாண் தகவல்கள் பரிமாறப்படுவதையும் நவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்திதொடர்ந்து கண்காணிக்க நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் வேளாண் உதவி இயக்குநரின் தலைமையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானி, வேளாண்அலுவலர், துணை வேளாண்மைஅலுவலர்களை உறுப்பினர்க ளாகக் கொண்டு வட்டார வேளாண் விரிவாக்க குழு அமைக்கப்பட்டு, வேளாண் துறை சார்ந்த அனைத்து களப்பணியாளர்களின் கிராம ஊராட்சி வாரியான 2021ஏப்ரல் 3-ம் தேதி வரையிலான பயணத்திட்டத்தை இறுதி செய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலும் பணிகள் ஆரம்பம்
விழுப்புரம் மாவட்டத்திலும் உழவர் - அலுவலர் தொடர்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் அண்ணாதுரை இதனை தெரிவித்தார். இதற்கான பணிகள் விழுப்புரம் மாவட்டத்திலும் நடந்து வருகின்றன.
மேலும் இக்குழுவானது மாவட்ட வேளாண் இணை இயக்குநரிடம் கலந்தாலோசித்து பயிர் சாகுபடி நிலவரம் குறித்த தகவல்களை அவ்வப்போது சேகரித்து, அதற்கேற்றாற்போல் விவசாயிகளுக்கான மாதாந்திர தொழில்நுட்ப செய்தியை வழங்க வுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் அதிகப்படியான விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தெரிவு செய்யப்பட்ட 10 முன்னோடிவிவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
6 மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு
இம்முன்னோடி விவசாயிகள் துறையினால் அளிக் கப்படும் தொழில்நுட்பங்களை அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு கற்றுத் தர வேண்டும். இத்திட்டத்தில் இணைந்து கொள்ள அதிகளவில் முன்னோடி விவசாயிகள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் இவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்த தகவலை கடலூர் வேளாண் இணை இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார்.