

வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்க, திருத்த, முகவரி மாற்றம் செய்ய வரும் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பது மற்றும் திருத்தம் செய்யும் பணி பல்வேறு கட்டமாக நடந்து வருகிறது. சென்னையில் செப்டம்பர் 20, அக்டோபர் 4-ம் தேதி நடந்த சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர்களை சேர்க்க 75 ஆயிரத்து 910 மனுக்கள், பெயர்களை நீக்க 854 மனுக்கள், திருத்தங்கள் மேற்கொள்ள 8 ஆயிரத்து 595 மனுக்கள், ஒரே சட்டப்பேரவை தொகுதிக் குள் முகவரி மாற்ற 15 ஆயிரத்து 345 மனுக்கள் என மொத்தம் 1 லட்சத்து 704 மனுக்கள் பெறப் பட்டுள்ளன.
இந்நிலையில், வரும் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட சிறப்பு முகாம் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடக்கிறது.
அதன் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் >www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் அக்டோபர் 14-ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பொதுச் சேவை மையங்களில் ரூ.10 கட்டணம் செலுத்தியும் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
புதிதாக பெயர் சேர்க்க விரும்புவோர் 2016 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டிருக்க வேண்டும். அதாவது 1998 ஜனவரி 1-ம் தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் முகவரி மாற்ற படிவம் 8ஏ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெயர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.