

அனைத்து மின் நிலையங்கள், துணை மின் நிலையங்களைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமரா, முன்னெச்சரிக்கை அலாரங்கள் பொருத்துமாறு தலைமைப் பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
சமீபகாலமாக அரசு பொதுத் துறை நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மக்கள் கூடும் இடங்களுக்கு தீவிரவாத மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 2 மாதங்களுக்கு முன்பே மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு உட்பட்ட நிறுவனங்களின் பாதுகாப்பை நவீனப்படுத்தவும், பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளன. இதன்படி, மின் நிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
3 ஷிப்ட் பாதுகாப்பு
இதன்படி அனைத்து அனல் மின்நிலையங்கள், நீர் மின்நிலையங்கள், எரிவாயு மின்நிலையங்கள், அணு மின்நிலையங்களில் ஒவ்வொரு நிலையத்துக்கும் அந்தந்த பகுதி துணை கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 100 போலீஸார் மூன்று ஷிப்ட்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் ‘டெக்ஸ்கோ’ எனப்படும் தமிழக ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கழகம் மூலம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் இருக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்ததைத் தொடர்ந்து, அனைத்து மின் நிலையங்கள், துணை மின் நிலையங்களின் பொறியாளர்களுக்கு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அந்நியரை அனுமதிக்கக் கூடாது
மின் நிலையங்களில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர வேறு வாகனங்களை அனுமதிக்கக் கூடாது. நுழைவுவாயிலில் கண்டிப்பாக சோதனைச் சாவடி அமைத்து, வாகன எண், வரும் நபர்களின் பெயர், முகவரி, நேரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். உயரதிகாரிகளின் அனுமதியின்றி, அந்நியர்களை உள்ளே விடக்கூடாது. நுழைவுவாயிலில் கேமரா பதிவுக்குப் பின்னரே வாகனங்கள், வெளியாட்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்.
மெட்டல் டிடெக்டர் சோதனை
வெடிகுண்டு போன்ற ரசாயனப் பொருட்களை கண்டறியும் கைப்பிடி மெட்டல் டிடெக்டர் மூலம் அந்நியர்களை சோதிக்க வேண்டும். வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர், வல்லூர் உள்ளிட்ட மின்நிலையங்கள் மற்றும் திறன் அதிகமுள்ள துணை மின்நிலையங்கள் ஆகியவற்றின் சுற்றுச்சுவர் மற்றும் உள்பகுதிகளில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்பன போன்ற உத்தரவுகள், அனைத்து மின்நிலைய பொறியாளர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை அலாரம் அடிக்கும் கருவி, தானாக போலீஸ் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தலைமையிடத்துக்கு புகார் அளிக்கும் மொபைல் மெசேஜ் சர்வீஸ் பொருத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.