

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் ஆண்டுக்கு 5 முறை தண்ணீர் நிரப்பியும் உடனே தண்ணீர் வற்றுவதற்கான காரணத்தை மாநகராட்சி கண்டறிய வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பழங்காலத்தில் வைகையில் இருந்து கால்வாய் வழியாக இத்தெப்பத்துக்கு தண்ணீர் வந்தது. மேலும் இப்பகுதியின் மழைநீர் அனைத்தும் தெப்பக்குளத்துக்குச் சென்றதால் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருந்தது. இக்கால்வாய்கள் நாளடைவில் ஆக்கிரமிக்கப்பட்டதால் கடந்த 10 ஆண்டுகளாக தெப்பகுளத்துக்கு தண்ணீர் வரவில்லை. அதனால் தெப்பத்திருவிழாவுக்காக மோட்டார் மூலம் வைகை ஆற்றிலிருந்து தெப்பத்துக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு நிரப்பப்படும் தண்ணீர் சில மாதங்கள் வரை தேங்கி இருக்கும்.
இந்நிலையில், தெப்பக் குளத்துக்கு ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் வாய்க்கால் கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது. இதனால் இனி ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் என மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் 5 முறை தண்ணீர் நிரப்பியும், சில வாரங்களிலேயே வறண்டு விட்டது.
இதற்கான காரணம் தெரி யாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர். தற் போது வைகை ஆற்றிலிருந்து தெப்பத்துக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஆண்டில் 4-வது முறையாக வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்துக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. ஆனால், எவ்வளவுதான் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பினாலும் சில வாரங்களிலேயே தண்ணீர் வேகமாக வற்றிவிடுகிறது. தற் போது பலமுறை நிரப்பியும் எதனால் குளத்தில் தண்ணீர் நிற்பது இல்லை? வேறு ஏதாவது வழியாக தண்ணீர் வெளியேறுகிறதா? என்பதை மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.