Published : 01 Dec 2020 08:21 PM
Last Updated : 01 Dec 2020 08:21 PM

கோவையில் 17 உயிர்களைப் பலிவாங்கிய சுற்றுச்சுவர்: ஓராண்டுக்குப் பின்னரும் முழுமையாகக் கிடைக்காத இழப்பீடு

தரைமட்டமான வீட்டின் முன்னால் கதறும் கமலம்மாள் | கோப்புப் படம்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் 20 அடி உயரக் கருங்கல் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம் நடந்து, நாளையுடன் ஓராண்டு ஆகிறது. இந்நிலையில், அந்தச் சம்பவத்தில் தங்கள் குடும்பத்தினரையும் உடைமைகளையும் இழந்தவர்களுக்கு முறையாக இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், புதிய வீடுகள் கட்டித் தரப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூர் ஏ.டி.காலனி அருகே வசித்துவரும் பிரபல துணிக்கடை உரிமையாளர், தனது மாளிகையைச் சுற்றி பிரம்மாண்டச் சுவர் எழுப்பியிருந்தார். கடந்த ஆண்டு தொடர்ந்து பெய்த மழை ஈரத்தாலும், அவரது மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்ட சாக்கடையாலும் அந்தச் சுவர் தூர்ந்துபோனது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகார்கள் கண்டுகொள்ளப்படவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி அதிகாலையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் நான்கு வீடுகள் அப்பளம் போல் நசுங்கின. அதற்குள் தூங்கிக்கொண்டிருந்த 17 பேர் உயிரோடு சமாதியாகினர். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்படி சுவர் தீண்டாமைச் சுவர் என்றும் சர்ச்சைகள் கிளம்பின. இதையடுத்து ஜவுளிக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, உயிரிழந்த ஒவ்வொருவரின் வாரிசுகளுக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்குவதாகவும், புதிய வீடுகள் கட்டித் தருவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தின் முதலாவது ஆண்டு நினைவு நாளையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், கூட்டம் போட்டுப் பேசவும் காவல்துறையினரிடம் பல்வேறு சமூக இயக்கங்கள் அனுமதி கோரியிருந்தன. ஆனால், போலீஸார் அனுமதியளிக்கவில்லை. அதை மீறி ஊர்வலம் நடத்தப்போவதாக போஸ்டர்கள், துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீஸார் நேற்று மாலை கொடி அணிவகுப்பும் நடத்தினர். இந்தச் சூழ்நிலையில், இழப்பீட்டுத் தொகை முறையாக வழங்கப்படவில்லை; புதிய வீடுகள் கட்டித் தரப்படவில்லை எனும் புகார்கள் மிகுந்த கவனம் பெறுகின்றன.

அந்தச் சம்பவத்தில் தனது மகன், மருமகள், பேரன், பேத்தி என நால்வரைப் பறிகொடுத்த கமலம்மாள் (65) இதுகுறித்துக் கூறுகையில், “சுவரு இடிஞ்சு விழுந்த நாள்ல திருப்பூர்ல என் மகள் வீட்டுக்குப் போயிருந்தேன். இல்லாட்டிப் போனா நானும் அதுக்குள்ளேதான் நசுங்கிச் செத்திருப்பேன். காலையில நான் வர்றதுக்குள்ளே எங்க வீடு இருந்த இடமே இல்லை. இடிஞ்சு விழுந்த இடத்தைத் துப்புரவா நிரவி பையன், மருமக, குழந்தைகளைப் பொணமா ஆஸ்பத்திரிக்க் கொண்டுபோயிட்டாங்க. அங்கே நான் போய் அவங்க முகத்தைக்கூடச் சரியா பாக்கலை.

உறவினர்களுடன் புகார் அளிக்க வந்த கமலம்மாள் (நீல நிறப் புடவை)

சொந்த பந்தங்களுக்குக்கூடச் சொல்லிவிட முடியலை. எல்லோரும் வர்றதுக்குள்ளே போலீஸே சுடுகாட்டுல வச்சு ஒட்டுமொத்தமா எரிச்சிருச்சு. சாயங்காலம் முதல்வரே வந்தாரு. என் குறையெல்லாம் கேட்டாரு. ‘என்னை ஒருத்திய மட்டும் இப்படி அனாதையா விட்டுட்டுப் போயிட்டாங்களே. என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே’ன்னு அவரு முன்னால அழுதேன். அதுக்கு அவரு, ‘கவலைப்படாதேம்மா. நாலு பேருக்கும் நீதான் வாரிசு. ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் குடுப்பாங்க. இந்தப் பணம் போன உசிருக்கு விலையில்ல. ஆறுதல்’னு சொன்னார். அப்பவே வாரிசு சர்டிபிகேட் எல்லாம் போட்டு அதிகாரிக கொடுத்தாங்க.

நாலு பேருக்கும் நானே வாரிசு. மத்திய அரசு நிதி, மாநில அரசு நிதின்னு மொத்தம் 48 லட்சம் ரூபாய் தருவோம்னு அதிகாரிகளும் சொல்லிட்டுப் போனாங்க. ஆனா, பின்னாடி மகனுக்கான இழப்பீட்டுத் தொகை மட்டும்தான் கொடுத்தாங்க. மருமகள், பேரன், பேத்திக்கும் செக் வச்சிருந்தாங்க. ஆனா கொடுக்க மாட்டேன்னுட்டாங்க. கேட்டா அவங்களுக்கு நான் நேரடி வாரிசு இல்லைன்னுட்டாங்க. ரேஷன் கார்டு, ஆதார் அட்டை இதெல்லாம் கேட்கறாங்க. அது எல்லாமே அன்னைக்குச் சுவர் இடிஞ்சு சேத்துல சிக்கி மண்ணோட மண்ணா போயிருச்சுன்னு சொன்னா, கேட்கவும் மாட்டேங்கிறாங்க. இன்னைக்கு வரைக்கும் நடையா நடந்தாச்சு. பல தடவை கலெக்டர் ஆபீஸுக்கு வந்து மனுவும் குடுத்தாச்சு. எதுவும் நடக்கலை. இடிஞ்சுபோன வீடுகளுக்கு வேற இடம் கொடுத்து வீடு கட்டித் தர்றதாச் சொன்னாங்க. அதுவும் இன்னும் நடக்கலை” என்றார்.

இது தொடர்பாகத் தமிழ்ப் புலிகள் அமைப்பின் கோவை மாவட்டச் செயலாளர் ராவணன் பேசும்போது, “வீடு இடிந்து இறந்தவர்களில் மகாலட்சுமி (வயது 10), ஹரிசுதா (வயசு 19), இவர்களின் தாய் அருக்காணி (வயது 38- இவர் முன்பே கணவரை இழந்தவர்) ஆவர். இதில் அருக்காணியின் அக்கா மேட்டுப்பாளையம், சங்கர் நகரில் வசித்து வருகிறார். அவருக்கும் நேரடி வாரிசு இல்லை எனக் காரணம் சொல்லி நிவாரணத்தொகை மறுக்கப்பட்டிருக்கிறது.

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு என எல்லாமே அந்த வீடுகள் இடிந்ததில் காணாமல் போய்விட்டன. பொக்லைன் இயந்திரம் மூலம் இரவோடு இரவாக இடிபாடுகளை அள்ளியவர்களே அரசு ஊழியர்கள்தான். அது அதிகாரிகளுக்கும் தெரியும். அதை உத்தேசித்து இவர்களுக்கு வாரிசு சான்றிதழ் போட்டுத் தொகையைக் கொடுத்துவிடலாம்.

ஆனால், ‘இவ்வளவு பெரிய தொகையை இவங்களுக்குக் கொடுப்பதா?’ என்று அதிகாரிகள் நினைக்கிறார்கள். இதையெல்லாம்விடக் கொடுமை என்னவென்றால், சுற்றுச் சுவரை அந்த ஜவுளிக்கடைக்காரர் மறுபடியும் உயர்த்திக் கட்டிவிட்டார். முன்பு போலவே சாக்கடை நீரைக் காலனிப் பக்கமே விடுகிறார்கள். இப்போதும் அங்கே வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. அதையெல்லாம் முன்வைத்தே முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டோம். போலீஸார் அதற்கும் அனுமதி மறுப்பது என்ன நியாயம்?” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x