

கோவை மாநகரின் குறிப்பிட்ட பகுதிகளில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 130 முதல் 150 வரை இருந்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக, மாநகரின் குறிப்பிட்ட பகுதிகளில் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளது.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட போத்தனூர், ராமநாதபுரம், ஒண்டிப்புதூர், சரவணம்பட்டி, கணபதி, சவுரிபாளையம், செல்வபுரம், காளப்பட்டி, சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் 'பல்க் கேஸ்' எனப்படும் அதிக அளவில் தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் கண்டறியப்படுகின்றனர். இங்கு ஒருவருக்குத் தொற்று உறுதியானால், உடன் இருப்பவர்களில், குறைந்தபட்சம் 4 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்படுகிறது.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இன்று (டிச.1) 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறும்போது, "மாவட்டத்தில் தினமும் 4,500 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாநகரில் 13 இடங்கள், ஊரகப் பகுதியில் ஒரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி உள்ளது. கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள், கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். வீடுகளில் தங்கவைக்க அனுமதிக்கப்படுவதில்லை.
மாநகரில் மேற்கண்ட 9 பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு பகுதியிலும் தினமும் அதிகபட்சம் 9 பேருக்கும், குறைந்தபட்சம் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்படுகிறது. இங்கு நோய் தடுப்புப் பணியை கூடுதல் கவனம் செலுத்தி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் மாவட்டத்தில் நூறு பேருக்குப் பரிசோதனை செய்தால் 3.4 சதவீதம் கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதுவே,சென்னையில் 4.6 சதவீதம், நாகப்பட்டினத்தில் 4 சதவீதம், ஈரோட்டில் 3.8 சதவீதம், திருப்பூரில் 3.2 சதவீதம், சேலத்தில் 3.1 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மாநகரில் தொற்று உறுதி செய்யப்பட்ட நூறு பேரில் 1.25 சதவீதம் உயிரிழப்பு விகிதம் உள்ளது" என்றார்.
தடுப்புப் பணி தீவிரம்
மாநகராட்சி உயர் அதிகாரிகள் சிலர் கூறும்போது, "மாநகரில் மொத்தம் 7,569 வீதிகள் உள்ளன. இதில் 6,891 வீதிகளில் கரோனா தொற்றுப் பரவல் இல்லை, மாநகரில் மட்டும் இதுவரை 31 ஆயிரத்து 724 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் 776 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 3 பேருக்குக் குறைவு, 3 பேர், 4 பேர், 5 அல்லது அதற்கு மேற்பட்டோர் எனத் தொற்று உறுதி செய்யப்படும் வீதிகள் வகைப்படுத்தப்பட்டு, நோய் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்துதல், தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல், சிகிச்சைக்கு அனுப்புதல், தடுப்பு மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றனர்.
மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் கூறும்போது, "மாநகரில் வெளியிடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா நோய் தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
தேநீர் கடைகள், உணவகங்கள், சிற்றுண்டிகள், பேக்கரிகள் உள்ளிட்ட இடங்களில் கரோனா பரவ வாய்ப்பு அதிகம் என்பதால், இங்கு அனைத்துப் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து, அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். மேற்கண்ட இடங்களில் மேற்கண்ட விதிகளைப் பின்பற்றாமல் அலுவலர்கள், பணியாளர்கள் பணியாற்றினால், அந்த இடத்துக்கு அபராதம் விதிப்பதுடன், அந்த நிறுவனமோ அல்லது கடையோ தற்காலிகமாக சில நாட்களுக்கு மூடக் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்றார்.