Published : 01 Dec 2020 05:44 PM
Last Updated : 01 Dec 2020 05:44 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவர் புயலுக்குப் பிறகு 98 ஏரிகள் முழுமையாக நிரம்பின: நீர்வரத்து தொடர்வதால் கண்காணிப்பு தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவர் புயலுக்குப் பிறகு 98 ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 697 ஏரிகளும் மற்றும் உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் 1,253 ஏரிகளும் உள்ளன. இந்த ஏரிகளை நம்பி விவசாய நிலமும், விவசாயிகளும் உள்ளனர். வானம் பார்த்த பூமியான, திருண்ணாமலை மாவட்டத்தில் கோடை மழை, தென்மேற்குப் பருவமழை ஏமாற்றியதால், ஏரிகள் வறண்டு கிடந்தன. அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்போது ஏற்படும் வானிலை மாற்றத்தால், மழைச் சாரல் இருந்தது. அதன்பயனாக, நவம்பர் 23-ம் தேதி வரை, மாவட்டத்தில் உள்ள 1,950 ஏரிகளில் 19 ஏரிகள் மட்டுமே நிரம்பின.

இந்த நிலையில், நிவர் புயலின் தாக்கம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாகக் காண முடிந்தது. ஜவ்வாது மலையில் பெய்த கனமழையால் செய்யாறு, கமண்டல நாக நதி, மஞ்சளாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால், ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

தூர்வாரப்படாத கால்வாய்களைக் கடந்தும் நீர்வரத்து தொடர்கிறது. நேற்று (நவ.30) நிலவரப்படி, 7 நாட்களில் 98 ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிகின்றன. இதில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 59 ஏரிகளும் மற்றும் உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 58 ஏரிகளும் அடங்கும்.

பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில், 59 ஏரிகள் 100 சதவீதமும், 75 முதல் 99 சதவீதம் வரை 69 ஏரிகளும், 50 முதல் 74 சதவீதம் வரை 173 ஏரிகளும், 25 முதல் 49 சதவீதம் வரை 278 ஏரிகளும், 25 சதவீதத்துக்குக் குறைவாக 118 ஏரிகளும் நிரம்பி உள்ளன.

உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் 58 ஏரிகள் 100 சதவீதமும், 91 முதல் 99 சதவீதம் வரை 24 ஏரிகளும், 81 முதல் 90 சதவீதம் வரை 70 சதவீத ஏரிகளும், 71 முதல் 80 சதவீதம் வரை 148 ஏரிகளும், 51 முதல் 70 சதவீதம் வரை 328 ஏரிகளும், 26 முதல் 50 சதவீதம் வரை 254 ஏரிகளும், 25 சதவீதத்துக்குக் குறைவாக 344 ஏரிகளும் நிரம்பியுள்ளன. தொடர்ந்து, நீர்வரத்து உள்ளதால், மேலும் பல ஏரிகள் தனது முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏரிகளைக் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x