Last Updated : 01 Dec, 2020 04:43 PM

 

Published : 01 Dec 2020 04:43 PM
Last Updated : 01 Dec 2020 04:43 PM

புரவி புயலில் இருந்து தென்னை மரங்களைப் பாதுகாப்பது எப்படி?- நெல்லை மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு ஆலோசனை

புரவி புயலில் இருந்து தென்னை மரங்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எதிர்வரும் நாட்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்தகாற்றுடன் கனமழை பெய்யலாம் என்று வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிதீவிரமான வேகத்துடன் வீசும் புயல் காற்றிலிருந்து தென்னை மரங்களை பாதுகாக்க நல்லகாய்ப்பு உள்ள தென்னந்தோப்புகளில் முதிர்ச்சியடைந்த அல்லது முதிர்ச்சியடையும் தருவாயில் உள்ள இளநீர் காய்களை பலத்த காற்றுவீசத் தொடங்குவதறகுள் வெட்டி எடுக்க வேண்டும்.

தென்னைமரங்களில் தலைப் பகுதியின் அடிப்பாகத்தில் அதிகஎடையுடன் காணப்படும் தென்னை ஒலைகளைவெட்டிஅகற்றவேண்டும். இவ்வாறு செய்வதால் தென்னை மரங்களில் தலைப்பகுதியின் எடை குறைந்து வேகமாக வீசும் காற்று தென்னை மரங்களின் தலைப்பகுதிகளை எளிதாக கடக்க முடியும் என்பதால் தோப்புகளில் உள்ளதென்னை மரங்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். வாய்ப்புள்ள இடங்களில் தென்னை மரங்களின் அடிப்பகுதியை உயரமாக மண்ணால் அணைக்க வேண்டும். இதனால்,மரங்களுக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.

மேலும் உடனடியாக தென்னை மரங்களுக்குநீர்ப்பாய்ச்சுவதையும்,உரமிடுவதையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். இதனால்,தென்னைமரங்களின் வேர்ப்பகுதி நன்கு இறுகி பாதிக்கப்படாமல் காற்றின் வேகத்தை தாங்கி நிற்கும். திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் மறறும் வள்ளியூர் ஆகிய கடலோரப் பகுதி விவசாயிகள் அதிக எண்ணிக்கைகளில் தென்னை மரங்களை சாகுபடி செய்துள்ளதால் இந்த வழிமுறைகளை உடனடியாக பின்பற்றி தங்களின்

தென்னை மரங்களை பலத்தகாற்றினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அவசர உதவிக்கு எண்:

வரும் 2 நாட்களுக்கு புயல் காரணமாக பலத்த காற்று மற்றும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். புயல் மற்றும் கனமழையின்போது வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருங்கள். வீண் வதந்திகளை நம்பாதீர்கள். அவசர உதவிக்கு திருநெல்வேலி மாவட்ட சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண் 9498101762 அல்லது 100-ஐ அழைக்கவும் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x