Last Updated : 01 Dec, 2020 04:27 PM

 

Published : 01 Dec 2020 04:27 PM
Last Updated : 01 Dec 2020 04:27 PM

கன்னியாகுமரியில் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பேரிடரை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் தீவிரம்; ஆழ்கடலில் தகவலின்றி தவிக்கும் 161 விசைப்படகுகளை மீட்க நடவடிக்கை

நாகர்கோவில்

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குமரியில் இருந்து மீன்பிடிக்க சென்று ஆழ்கடலில் தகவலின்றி தவிக்கும் 161 விசைப்படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தென்கிழக்கு வங்க கடலில் உருவான புதிய காறறழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று கரையை கடக்க உள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2017ம் ஆண்டு ஒக்கி புயலின்போது ஏற்பட்ட பாதிப்பு போன்று பேரிடர்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முன்னெச்செரிக்கை நடவடிக்கையை குமரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.

அதே நேரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய்பட்டணம், தூத்தூர், வள்ளவிளை பகுதியில் இருந்து விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 161 படகுகள் அரபிக்கடலில் புயல் எச்சரிக்கை குறித்த தகவல் தெரியாமல் ஆழ்கடலிலே மீன்பிடித்து வருகின்றனர்.

இதில் உள்ள 1800-க்கும் மேற்பட்ட மீனவர்ளை புயலுக்குள் பிற மாநிலங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் கரைசேர்ப்பதற்கான முயற்சியில் மீன்வளத்துறையினர் ஈடுபட்டு வருகிறனர்.

கப்பல்படை, மற்றும் விமானம் மூலம் லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா ஆழ்கடல் பகுதியில் தவிக்கும் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை தகவல்களை கொண்டு போய் சேர்க்கும் முயற்சி மும்முரமாக நடந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேரிடர்கால முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்; புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாவட்டம் முழுவதும் துணை ஆட்சியர் தலைமையிலான 8 மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மண்டலத்திலும் பேரிடரினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக 76 இடங்களும், அதிக பேரிடர் ஏற்படும் பகதிகளாக 34 இடங்களும் கண்டறியப்பட்டு, இடத்திற்கு தலா 10 முன்கள பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு போதிய பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சேதம் விளைவிக்க வாய்ப்புள்ள பாழடைந்த கட்டிடங்கள், ஆபத்தான காய்ந்த மரங்களை கண்டறிந்து அவற்றினை அகற்றிட மண்டல அளவிலான குழுக்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

பெருவெள்ளத்தினால் ஆபத்திற்குள்ளாகும் தாழ்வான பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி தங்க வைப்பதற்கு 75 தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இயற்கை பேரிடரினால் ஏற்படும் சேதங்களை சீரமைத்திட ஜேசிபி, மின் மரஅறுவை இயந்திரங்கள், ஜெனரேட்டர் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் பாதிப்பிற்குள்ளாகும் தாழ்வான பகுதிகளை வட்டாட்சியர்கள், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கண்டறிந்து பொதுமக்களை தற்காலிக முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுவோருக்கு சமுதாய சமையலறை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2 ஆகியவை பாதுகாப்பான நிலையில் முழு கண்காணிப்பில் உள்ளது.

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்கனவே மீன்பிடி படகு உரிமையாளர்கள், மீனவ சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆயத்த கூட்டத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 2ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும் கடந்த 30ம் தேதிக்குள் அனைத்து ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் அருகிலுள்ள துறைமுகங்களுக்கு திரும்புமாறு கேட்டுகொள்ளப்பட்டது. 2ம் தேதி வரை உள்ள வானிலை எச்சரிக்கை குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வானிலை எச்சரிக்கை அனைத்துமே அனைத்து மீனவ கிராமங்களுக்கும் சீனவர் கூட்டுறவு சங்கங்கள், மீனவர் சங்கங்கள், தேவாலயம் மூலம் தொடர்ந்து தெரிவிக்கப்படுகின்றன. வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகவும் வானிலை தகவல்கள் பரப்பப்படுகின்றன.

ஆழ்கடலில் மீன்பிடி படகுகளை செயற்கைகோள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று திரும்பி வராத 161 விசைப்படகுகளுக்கு மீன்வளத்துறை வாயிலாகவும், கடலோர கப்பல்படை வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஆழ்கடலில் லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா என கடலோர பகுதிகளில் இருக்கும் அந்தந்த மீன்பிடி துறைமுகங்களுக்கே திரும்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துறைமுகங்களிலேயே தங்கியுள்ள விசைப்படகு மீனவர்களை குமரியில் சொந்த ஊருக்கு திரும்பி வருவதற்கு மீன்வளத்துறை, கடலோர கப்பற்படை வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்தார்.

குமரியில் பேரிடரை எதிர்கொள்ள 3 தேசிய பேரிடர் மீட்பு படைகள்

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் 3 தேசிய பேரிடர் மீட்பு படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு பேரிடர் மீட்பு படை குழுவிலும் 19 வீரர்கள் உள்ளனர். இதில் ஒரு தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று அரக்கோணத்தில் இருந்து நாகர்கோவில் வந்தனர். அவர்கள் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் முகாமிட்டுள்ளனர். மேலும் இரு தேசிய பேரிடர் மீட்பு படையினர் குமரி வருகின்றனர்.

மொத்தம் இரு குழுவினர் நாகர்கோவிலிலும், ஒரு குழுவினர் குளச்சல் புனித மேரி மேல்நிலை பள்ளியிலும் தங்கி பேரிடம் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இந்திய வானிலை மையத்தில் இருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் எந்நேரமும் மீட்பு பணிகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

பேரிடர் புகார்களை தெரிவிக்க அவசரக்கால செயல் மையம் திறப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு புகார்களை தெரிவிப்பதற்கு 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட அவசரகால செயல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மற்றும் தூத்தூரில் இந்த அலுவலகங்கள் செயல்படுகிறது. 1077, மற்றும் 04652 231077 என்ற அவசரகால செயல் மைய எண்ணிற்கு பேரிடர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 7-ம் தேதி வரை ஆற்றுப்படுகை, கடற்கரை ஓரங்களில் பொதுமக்கள் செல்வதை தவிர்த்திடுமாறும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான குடிநீர், பேட்டரி டார்ச் லைட் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x