Last Updated : 01 Dec, 2020 04:13 PM

 

Published : 01 Dec 2020 04:13 PM
Last Updated : 01 Dec 2020 04:13 PM

விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் 2-வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்; 100 பேர் கைது: ஏர் கலப்பையுடன் சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர்.

திருச்சி

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் இன்று இரு வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் நேற்று (நவ. 30) விவசாயிகள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 2-வது நாளான இன்றும் (டிச. 01) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஸ்ரீரங்கம் மற்றும் காட்டூரில் சாலை மறியலிலும், பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதிக் குழு சார்பில் ஸ்ரீரங்கம் மேம்பாலம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா தலைமை வகித்தார். கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

போராட்டத்தின்போது, 'வேளாண் விவசாய விரோதச் சட்டத்தை பாடையில் ஏற்றுவோம்' என்ற பதாகையை பாடையில் வைத்து, மாலையிட்டு ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதைக் கண்டு அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், பாடையைப் பறிக்க முயன்றனர். இதைத் தடுக்க கட்சியினர் முயன்றதால், இருதரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு நேரிட்டது. தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள் ராஜா, ஸ்ரீதர், தர்மா, வீரமுத்து, சுப்பிரமணி, கணபதி, ஜெய்குமார் உட்பட 50-க்கும் அதிகமானோரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல், கட்சியின் காட்டூர், பொன்மலை பகுதிக் குழுக்கள் எஸ்ஐடி அருகேயுள்ள பேங்க் ஆப் இந்தியாவை இன்று முற்றுகையிடச் சென்றனர். கட்சியின் பகுதிக் குழுச் செயலாளர்கள் பொன்மலை கார்த்திகேயன், காட்டூர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாகச் சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.சி.பாண்டியன், பி.லெனின் உட்பட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலக பிரதான நுழைவுவாயில் முன் இன்று சிஐடியு மாநகர் மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ஜி.கே.ராமர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கராஜன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜெயபால், மணிமாறன், ராஜேந்திரன், ஜெயராமன், சீனிவாசன் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகி அஸ்லம் பாஷா, டிஆர்இயு நிர்வாகி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x