டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 49 பேர் கைது 

தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பிடித்து இழுத்து கைது செய்ய முயற்சித்த போலீஸார். படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பிடித்து இழுத்து கைது செய்ய முயற்சித்த போலீஸார். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் முற்றுகை, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 6 பெண்கள் உள்ளிட்ட 49 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அக்கட்சியினர் இன்று காலை 10.30 மணியளவில் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே திரண்டு, முற்றுகையிடுவதற்காக அஞ்சல் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு மாநகர செயலாளர் தா. ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், ராகவன், பேச்சிமுத்து, முருகன், சண்முகராஜ், புறநகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயாளர் சங்கரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் எம்.எஸ். முத்து, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டக்காரர்கள் வைத்திருந்த பேனர் கிழிந்தது.

இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து கோஷமிட்டனர்.

இதையடுத்து டிஎஸ்பி கணேஷ் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடட 6 பெண்கள் உள்ளிட்ட 49 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in