

ஆழ்கடல் நீச்சலின்போது கூட்டமாக அரியவகை கொம்பு திருக்கை மீன்கள் செல்வதை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் பார்த்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
புதுச்சேரி ஆழ்கடல் நீச்சல் வீரர் பயிற்சியாளர் அரவிந்தன் கடந்த பல ஆண்டுகளாக இத்துறையில் உள்ளார். கரோனா காலத்தில் கடல் தூய்மையாக இருப்பது தொடர்பாக வீடியோவை வெளியிட்டிருந்தார்.
நிவர் புயலுக்கு முன்பாக புதுச்சேரி துறைமுகப்பகுதியிலிருந்து புறப்பட்டு கடலில் ஆழ்கடலில் பயிற்சி ஈடுபட்டிருந்தனர். அங்கு அரியவகை கொம்பு திருக்கை மீன்களை பார்த்ததாக வீடியோ, படங்களை எடுத்து இன்று (டிச. 01) வெளியிட்டுள்ளார்.
அரிய வகை மீன்கள் கடலில் உலா வந்தது தொடர்பாக அரவிந்தன் கூறுகையில், "நிவர் புயலுக்கு முன்பாக புதுச்சேரி துறைமுகத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் 115 அடி ஆழத்தில் நீச்சல் பயிற்சியை வீரர்களுடன் எடுத்தபோது அரிய வகை கொம்பு திருக்கை மீன்களை பார்த்தோம். 15 அடி அகலமும் ஆறடி உயரமும் கொண்ட மீன்களை கூட்டமாக முதல்முறை பார்த்தது பிரமிப்பாக இருந்தது. அதன் எடை சுமார் ஆயிரம் கிலோ வரை இருக்கும். கரோனா காலத்தில் கடல் தூய்மையாக இருந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது இதை பார்த்துள்ளோம். ஓரிரு மீன்களை மட்டும் இதுவரை பார்த்துள்ளோம். முதல்முறையாக கூட்டமாக பார்த்தோம். கடந்த 12 ஆண்டுகளில் இதுபோல் பார்த்ததில்லை" என்று தெரிவித்தார்.