Published : 01 Dec 2020 03:43 PM
Last Updated : 01 Dec 2020 03:43 PM

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு; முதல்வர் உரிய முடிவெடுப்பதாகத் தெரிவித்தார்: தலைமைச் செயலகத்தில் அன்புமணி பேட்டி

தமிழகத்தில் நான்கில் ஒரு பங்கினர் வன்னியர்களாக உள்ளனர். இந்தச் சமூகம் முன்னேறினால்தான் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று முதல்வரிடம் கூறினோம். முதல்வர் நிச்சயமாக நல்ல முடிவை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார் என்று அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார்.

வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி பாமக இன்று போராட்டம் அறிவித்திருந்தது. சென்னை வந்த பாமகவினர் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை முழுவதும் புறநகரிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸை முதல்வர் பழனிசாமி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையடுத்து அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோர் குழுவாக, முதல்வர் பழனிசாமியை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

பின்னர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“முதல்வர் அழைப்பை ஏற்று ஒரு குழுவாக முதல்வரையும், துணை முதல்வரையும் சந்தித்து எங்களது கோரிக்கைகள், குறிப்பாக தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 20% இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரினோம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 1989-ம் ஆண்டிலிருந்து இன்று வரை எந்தெந்த சமுதாயத்தினர் எவ்வளவு பணியிடங்களை இட ஒதுக்கீடு மூலமாக பணி ஒதுக்கீடு செய்துள்ளனர் என்கிற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுவையும் நாங்கள் கொடுத்தோம்.

இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கு முன்னர், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என 10 அம்சக் கோரிக்கைகளைக் கொடுத்தோம். கடந்த ஆண்டு முதல்வர் பழனிசாமியை ராமதாஸ் தலைமையில் ஒரு குழு சந்தித்து மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

மீண்டும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 3 மாதங்களுக்கு முன்பு எங்கள் கட்சியின் பொதுக்குழு கூடி வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்குத் தெரியப்படுத்தினோம்.

10 நாட்களுக்கு முன் பாமக, வன்னியர் சங்கம் காணொலி வாயிலாக நடத்திய பொதுக்குழுவில் மீண்டும் இந்தக் கோரிக்கையைத் தீர்மானமாக வலியுறுத்தி அறவழியில் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவோம் எனத் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த வகையில் சென்னையில் அறவழியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். வரும் வழியில் எங்கள் தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனாலும், அவர்கள் அமைதியான முறையில் இருக்கவேண்டும் என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குச் சற்று நேரம் முன்பு முதல்வர் அழைத்து உங்கள் கோரிக்கையைக் கொடுங்கள் என்று சொன்னார். அதன்படி முதல்வரைச் சந்தித்தோம். உடன் துணை முதல்வரும் இருந்தார். எங்கள் கோரிக்கையை நாங்கள் சொன்னோம். இது சாதிப் பிரச்சினை கிடையாது. எந்த சமூகத்தினருக்கும் எதிரான போராட்டம் கிடையாது. எந்த அரசியல் கட்சிக்கும் எதிரான போராட்டம் கிடையாது.

இது சமூக நீதிப் பிரச்சினை. இதைத் தமிழகத்தின் வளர்ச்சிப் பிரச்சினையாகப் பார்க்கவேண்டும், காரணம் தமிழகத்தில் நான்கில் ஒரு பங்கினர் வன்னியர்களாக உள்ளனர். இவர்கள் இங்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், சமூகத்திலும் மிக மிக பின்தங்கியுள்ளனர். விவசாயிகளாக உள்ளனர். குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சாலை போடுபவர்கள், வீட்டைக் கட்டும் கட்டிடத் தொழிலாளர்கள், கல்லுடைப்பவர்கள் என்று மிகவும் பின்தங்கிய சமுதாயமாக வாழ்கின்றனர். இந்தச் சமுதாயம் வாழ்கின்ற பகுதியில் எந்த வளர்ச்சியும் இல்லை, தொழில் வளர்ச்சியும் இல்லை. வேலை வாய்ப்பு இல்லை. மற்ற மாநிலங்களில் சென்று வேலை செய்யும் சூழல் உள்ளது. கல்வியை எடுத்துக்கொண்டால் கடைசி 7 மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் அது வடமாவட்டம். தொழிலிலும் கடைசியாக உள்ளது. இந்தச் சமூகம் முன்னேறினால்தான் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று கூறினோம். முதல்வர் அதைக் கேட்டு நிச்சயமாக நல்ல முடிவை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்தச் சமுதாயத்தை ஒரு வன்முறைச் சமுதாயமாக மாற்றாதீர்கள். அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்காதீர்கள். இந்தச் சமுதாயம் ஏர் பிடிக்கும் சமுதாயம். முன்னேற்றத்திற்காக 40 ஆண்டுகால கோரிக்கையை வைத்து எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற முதல்வர்களைச் சந்தித்தோம். இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கிறோம். நாற்பாதாண்டு காலம் போராடி வருகிறோம்.

எங்கள் நோக்கமே அறவழியில் அமைதியாகப் போராடுவதுதான். எங்கள் தொண்டர்கள் மீது எந்த வழக்கும் போடாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” .

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x