Published : 30 Oct 2015 04:12 PM
Last Updated : 30 Oct 2015 04:12 PM

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவ.16 முதல் மத்திய படை பாதுகாப்பு வழங்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவம்பர் 16-ம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான தொகையை தமிழக அரசு ஒரு வாரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகினர்.

அப்போது, மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜேந்திர சதுர்வேதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "காவல், பொது அமைதி என்பது மாநில அரசு விவகாரம். மாநில அரசு கோரினால் மட்டுமே மத்திய படையை அனுப்ப வேண்டும். மத்திய படைகளை நியமித்தால் அனைவரது கைப்பைகள், சூட்கேஸ்கள் சோதிக்கப்படும். இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

மத்திய படையினருக்கு உள்ளூர் மொழி தெரியாததால் பதற்றம் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமாகும். அவர்களுக்கும் மாநில போலீஸாருக்கும் அதிகார வரம்பு தொடர்பான பிரச்சினைகளும் எழும். 2009-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், நுழைவுவாயில்களில் ஏற்கெனவே கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு தேவைப்பட்டால், 650 காவலர்கள் தேவை. அவர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.32.73 கோடி செலவாகும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் என்றால் ரூ.16.60 கோடி தேவை. மத்திய படை பாதுகாப்பு தேவை என்றால், இத்தொகையை டெபாசிட் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்" என்று மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன் விவரம்:

'நீதிமன்ற பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்குவது வேதனை அளிக்கிறது. இது ஈகோ பிரச்சினை அல்ல. உயர் நீதிமன்றப் பாதுகாப்பு முக்கியம் என்ற அடிப்படையில் ஆராயவேண்டும். உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மத்திய படைதான் பாதுகாப்பு வழங்குகிறது. இது வழக்கமானதுதான்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 2 வெடிகுண்டு புரளி சம்பவங்கள் நடந்தன. சில வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற அறைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்துக்குள் பதாகைகளை எடுத்து வருபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற வராண்டாவில் குழுவாக நின்று கோஷமிடுவது, நீதிமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவது போன்றவை ஆரோக்கியமானது அல்ல. இவற்றை கருத்தில் கொண்டுதான் மத்திய பாதுகாப்பு படை தேவை என்கிறோம்.

எனவே, சிஐஎஸ்எப் படையை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கான தொகையை மத்திய அரசிடம் தமிழக அரசு இன்னும் 7 நாட்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். அதன்பிறகு, உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் படையினரை பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி விடுமுறைக்குப் பிறகு நவம்பர் 16-ம் தேதி உயர் நீதிமன்றம் திறக்கப்படும்போது இங்கு புதிய பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டதும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி தெரிவித்தார்.

வழக்கின் பின்னணி விவரம்:

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி கடந்த செப்டம்பர் 14-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வு நீதிமன்றத்துக்குள் தலைமை நீதிபதி எதிரில் அமர்ந்து வழக்கறிஞர்களும், சட்ட மாணவர்களும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பான சூழ்நிலையில் பணி செய்வதை உறுதி செய்வதற்காக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படை அல்லது வேறு சிறப்பு அமைப்பிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்துக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவையில்லை என்றும் தமிழக காவல்துறையினரே போதும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு முன்பு கடந்த 12-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "வழக்கறிஞர்கள் - காவல் துறையினர் இடையே பரஸ்பரம் நம்பிக்கை இல்லாத தற்போதைய சூழ்நிலையில், உயர் நீதிமன்றத்துக்கு நிபுணத்துவம் பெற்ற ஒரு சுதந்திரமான அமைப்பு மூலம் உயர் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அவ்வாறு வழங்கினால், தற்போதைய சூழல் மாறி சுமுகமான சூழல் உருவாகும். பாதுகாப்புப் பணியில் தமிழக காவல் துறையினரை விலக்கிக் கொள்ளாமல், கூடுதலாக சுதந்திரமான அமைப்பைக் கொண்டு பாதுகாப்பு அளிக்கலாம்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x