

சரியான முன்னெச்சரிக்கை மற்றும் திட்டமிடலால் இயற்கையின் சீற்றத்தைக் கடந்து செல்லும் சரியான பாதுகாப்பு நெறிமுறைகளை அரசு ஏற்படுத்தி மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக அறிவித்துள்ளது. அதன்படி அனைவரும் தவறாமல் கடைப்பிடித்து. பல்வேறு இழப்பில் இருந்து நம்மை, நாம் காத்துக்கொள்ள வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று காரைக்காலுக்குத் தென்கிழக்கே கடலில் 800 மைலில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
கடந்த வாரம் கடலூருக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே நிவர் புயல் கரையைக் கடந்தது. அதன் எதிரொலியாக பல்வேறு இடங்களில் பெய்த கனமழையின் காரணமாகப் பல இடங்களில் மழை நீர் வடியாத நிலையில் தற்பொழுது புதிதாக உருவாகி உள்ள புயலின் காரணமாக ஒரிரு மாவட்டங்களில் மிதமான மழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். ஆகவே, கரையோரப் பகுதி மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பான, பகுதிகளுக்கும், முகாம்களுக்கும் செல்ல வேண்டும்.
நிவர் புயலின்போது அரசு எடுத்த முன்னெச்சரிக்கையின் காரணமாக பெரும் அளவில் உயிரிழப்பும், பொருள் இழப்பும் தவிர்க்கப்பட்டது. அதேபோல் தற்பொழுது உருவாகியுள்ள புயலுக்காக அரசு எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், அறிவுரைகளையும், முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் தமிழகக் கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் வருகிற 4ஆம் தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆகவே, மீனவர்கள் உங்களை நம்பியிருக்கும் குடும்பத்தினரின் பயத்தையும், அச்சத்தையும் போக்கும் வகையில் கடலுக்குச் செல்லாமல் இருப்பது நன்மை பயக்கும்.
இயற்கையின் சீற்றத்தைச் சரியான முன்னெச்சரிக்கை மற்றும் திட்டமிடலால் அவற்றைக் கடந்து செல்லும் சரியான பாதுகாப்பு நெறிமுறைகளை அரசு ஏற்படுத்தி மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக அறிவித்துள்ளது. அதன்படி அனைவரும் தவறாமல் கடைப்பிடித்து, பல்வேறு இழப்பில் இருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும் என்று தமாகா சார்பாக அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.