Published : 18 Oct 2015 10:25 AM
Last Updated : 18 Oct 2015 10:25 AM

முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த தொகுதி ஆர்.கே.நகரில் வேலைவாய்ப்பு முகாம் - 17 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை

ஆர்.கே.நகர் தொகுதியில் அரசு சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 17 ஆயிரத்து 95 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

அரசு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் உள்ள தண்டையார்பேட்டை துறை முக பொறுப்புக் கழக விளையாட் டுத் திடலில் நேற்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம் முகாமை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் பி.தங்கமணி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 358 நிறுவனங்கள் பங்கேற்றன.

மேலும் வேலையளிப்போர் கோரும் சிறப்பு திறன்களை அறிந்து அதற்கு பயிற்சியளிக்க ஏதுவாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தொழிற்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் பங்கேற்று, தாங்கள் வழங்கும் சேவைகள் குறித்து, வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்களுக்கு விளக்கினர். வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்க விரும்புவோர் பயன்பெறும் வகையில் தமிழகத்திலுள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சேவை தொடர் பாகவும் விளக்கப்பட்டது.

இம்முகாமில் தெரிவு செய்யப்பட்ட 5 இளைஞர்களுக்கு கோத்தகிரியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர்கள் பா.வளர்மதி, பி.பழனியப்பன், டி.கே.எம்.சின்னைய்யா, எஸ்.கோகுல இந்திரா, பி.வி.ரமணா, எஸ்.அப்துல் ரஹீம், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பங் கேற்று, தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். இந்த முகாமில் மொத்தம் 58 ஆயிரத்து 835 இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் 6 ஆயிரத்து 453 பேருக்கு இறுதி பணி நியமன ஆணைகள், 10 ஆயிரத்து 642 பேருக்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் என மொத்தம் 17 ஆயிரத்து 95 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் திறன் மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சேர 14 ஆயிரத்து 392 பேர் பதிவு செய்துள்ளனர். அயல்நாட்டில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்து, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் 1057 பேர் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக மாற்றுத் திறனாளி வி.நளினி கூறும் போது, “இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி வசதிகள் செய்யப் பட்டிருந்தன. அதன் மூலம் இம்முகாமில் உள்ள பல்வேறு அரங்குகளுக்கு என்னால் எளிதில் செல்ல முடிந்தது. எனக்கு தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணி கிடைத்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x