

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வழி செய்யும் வேளாண்மை சீர்திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் விவசாயிகள் எதிர்க்கட்சியின் தூண்டுதலால் நடத்தவிருந்த போராட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
திருச்செந்தூரில் வரும் 7-ம் தேதி நிறைவடைய உள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார்.
விவசாயிகளின் பல ஆண்டு தேவைகளைக் கருத்தில் கொண்டு சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு வழி ஏற்படும் வகையில் வேளாண் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன் மூலமாக அவர்கள் நல்ல விலை கிடைப்பதற்காக வேறு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.
இந்த சீர்திருத்த சட்டத்தின் மூலமாக பல இடங்களில் சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை வெளிநாடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய வாய்ப்பாக அமையும்.
விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ள திட்டமாக உள்ள இந்தத் திட்டத்துக்கு எதிராக டெல்லியில் சில அரசியல் அமைப்புகள் தூண்ட்டுதலால் போராட்டம் நடத்தப்படுகிறது.
தமிழகத்திலும் விவசாயிகள் திருத்தச் சட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் தவறாக சித்தரித்து போராட்டத்தைத் தூண்ட முயற்சித்தது. ஆனால், அது முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் போராடிவருகின்றனர். அந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களது கருத்து.
தலித் சமூகத்தில் ஐந்து உட்பிரிவினரை தேவேந்திர குல வேளாளர் என அறிவிப்பது குறித்து சரியான அறிவிப்பு சரியான நேரத்தில் வரும்.
ரஜினிகாந்த் ஒரு சிறந்த ஆன்மிகவாதி. தேசிய சிந்தனை கொண்டவர். அவர் புதிதாக அரசியல் இயக்கம் ஆரம்பித்தால் பாரதிய ஜனதா கட்சி வரவேற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.