Published : 01 Dec 2020 01:50 PM
Last Updated : 01 Dec 2020 01:50 PM

கரோனா தடுப்பு; அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றாதோருக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு பின்னர் படிப்படியாகத் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தளர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக, கரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அபராதம் விதிக்கும் நடைமுறையைத் தமிழக அரசு அறிவித்து, அதை கடந்த செப்டம்பர் 4-ம் தேதி அரசிதழில் வெளியிட்டுள்ளது.

சுகாதாரத்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பின்படி, தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல், பொது இடத்தில் முகக்கவசம் அணியாதது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதது, பொதுவெளியில் எச்சில் துப்புதல், முடிதிருத்தகம், ஸ்பா, ஜிம் ஆகியவற்றுக்கான விதிகளைப் பின்பற்றாதது குற்றம் என்றும், அதற்காக 200 ரூபாயில் தொடங்கி 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க புதிய அறிவிப்பு வகை செய்கிறது.

1939ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர், காவல்துறை, சுகாதாரத்துறை ஆகியோருக்கு அதிகாரம் இல்லாததால், அவர்களுக்கு அதிகாரம் அளித்து அந்தச் சட்டத்தில் திருத்தமும் (பிரிவு 76 (2)) கொண்டுவரப்பட்டது.

அரசிதழில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த 77 வயதான ஆர்.முத்துக்கிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (டிச.1) நடைபெற்றது.

தமிழக அரசுத் தரப்பில், கரோனா கட்டுப்பாடுகளை மீறினால் குற்றம் என அறிவித்து ஏற்கெனவே பல அறிவிப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவற்றுக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் தொடர்ந்துள்ள இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அரசின் வாதத்தை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, அபராதம் விதிப்பது தொடர்பான தமிழக அரசின் இந்த முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x