Published : 01 Dec 2020 12:56 PM
Last Updated : 01 Dec 2020 12:56 PM

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி பாமக சாலை மறியல்: சென்னையில் போக்குவரத்து பாதிப்பு

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் சென்னை மற்றும் புறநகரில் சாலை மறியல், ரயில் மறியல் செய்ததால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புறநகர் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி பாமக 1980ஆம் ஆண்டு கடும் போராட்டம் நடத்தியது. பின்னர் அது நிறுத்தப்பட்டது, ஆனாலும் 20% தனி இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் தொடரும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் இட ஒதுக்கீடு போராட்டம் தொடங்க உள்ளதாக ராமதாஸ் தெரிவித்தார். டிச.1 முதல் போராட்டம் நடக்கும், போராட்டத்தை நிறுத்திவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என எங்களை அழைக்கும் அளவுக்குப் போராட்டம் தீவிரமாக இருக்கும் என அவர் கூறியிருந்தார்.

டிச.1 அன்று சென்னையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காகப் பாரிமுனையில் போராட்டம் நடத்தப் பாமகவினர் திட்டமிட்டு வந்தனர். அவர்களுக்கு வாலாஜா சாலையில் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், பாரிமுனையில் போராட்டம் என்பதிலிருந்து பின்வாங்க மறுத்து, பாரிமுனை நோக்கி பாமகவினர் வாகனங்களில் இன்று திரண்டு வந்தனர். அவர்களை சென்னை எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். இதனால் சென்னை புறநகரில் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோன்று சென்னை நகருக்குள் வாலாஜா சாலை, மன்றோ சிலை, முத்துசாமி பாலம் அருகில் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலையூர் அருகே ரயில் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. ஆங்காங்கே மறியல் செய்தவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து டிச.4 வரை போராட்டம் நடைபெறும் என பாமக அறிவித்துள்ளது. அதற்குள் அரசு செவி சாய்க்காவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என்று பாமக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பாமகவினர் போராட்டம், சாலை மறியல் காரணமாக சென்னை மற்றும் புறநகரில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது.

காலையில் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் வாகன நெரிசலில் சிக்கினர். இது தவிர ரயில் மறியலிலும் ஈடுபட்டதால் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் கடற்கரை தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள், சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், திருவள்ளூர் செல்லும் ரயில்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இதனால் அவ்வழியாகப் பயணிக்கும் பொதுமக்களும், அங்கிருந்து பணிக்கு சென்னை வரும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

பாமகவினர் போராட்டம் நாளையும் தொடரும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x