

பாரத் நெட் ஊழலை எதிர்த்து விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, இன்று மக்கள் நீதி மய்யத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இணைந்தார். அவருக்குக் கட்சியின் தலைமை அலுவலகப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய சந்தோஷ் பாபு பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 ஆண்டுகள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென விருப்ப ஓய்வு பெற்றார். நீண்ட ஆட்சிப் பணி அனுபவமுள்ள ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ஐ.டி. துறையின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றினார்.
சந்தோஷ் பாபு நிர்வாக இயக்குநராக இருந்த தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷனுக்கான டெண்டருக்கு ஒப்புதல் அளிக்குமாறு அழுத்தம் கொடுத்ததில் அவர் அதிருப்தி அடைந்ததால், விருப்ப ஓய்வு கொடுத்து வெளியேறியதாகப் பரவலாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் விருப்ப ஓய்வை அரசு அங்கீகரித்து சில மாதங்கள் சென்ற நிலையில், சந்தோஷ் பாபு இன்று திடீரென மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன் அவர் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு உடனடியாகக் கட்சியின் தலைமை அலுவலகப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் கமல்ஹாசனுடன் இணைந்து பேட்டி அளித்தார். தமிழக அரசின் அழுத்தம் காரணமாகத் தான் பதவி விலகியதாக சந்தோஷ் பாபு தெரிவித்தார். தமிழகம் மற்ற மாநிலங்களை விட எங்கேயோ முன்னேறியுள்ளது. ஆனால், அதைவைத்து திருப்தி அடைய முடியாது. தமிழகம் அடைந்த வளர்ச்சியைவிட இன்னும் முன்னேற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.
ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றம் வேண்டும். அரசாங்கத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதற்கு நவீன டெக்னாலஜியுடன் இணைந்துதான் உருவாக்கமுடியும். இந்தியா டுடே மூன்றாண்டுகளாகத் தமிழகத்தைத் தேர்வு செய்துள்ளதாகச் சொல்கிறது. ஆனால், நாங்கள் சொல்வதைச் செய்தால் தமிழகம் எங்கேயோ இருக்கும் எனத் தெரிவித்தார்.
தமிழக அரசில் லஞ்சம், ஊழல் உள்ளதா? என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்த அவர், இது உங்களுக்கே தெரியும் என்று தெரிவித்தார்.