

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாகக் கேரள அரசு புதிய அணை கட்டுகிற முயற்சியை முற்றிலும் தடுக்கிற வகையில், மத்திய அரசோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வரை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (டிச. 1) வெளியிட்ட அறிக்கை:
"காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, மேகேதாட்டு போன்ற பிரச்சினைகளில் பாஜக ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. தேனி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் விவசாயத்திற்கு நீர்ப்பாசன வசதிகளை முல்லைப் பெரியாறு அணை மூலம் நீண்டகாலமாக விவசாயிகள் பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகக் கூறி இந்த அணைக்குப் பதிலாக ரூ. 1,000 கோடி செலவில் புதிய அணை கட்ட வேண்டுமென்று தொடர்ந்து கேரள அரசு கூறி வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கேரள அரசு தொடர்ந்து புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளையும், விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கிற பணிகளையும் தீவிரமாக செய்து வருகின்றது. இது விவசாயிகள் மத்தியில் கடும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும், பல்வேறு வல்லுநர் குழுக்களும், நிபுணர்களும் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து பலமாக இருக்கிறது என ஒருமுறைக்கு பலமுறை சான்றளித்த பிறகும், கேரள அரசும், அரசியல் கட்சியினரும் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையைக் கட்டியே தீருவோம் என்று பிடிவாதமாக செயல்படுவது இரு மாநிலங்களுக்கிடையே இருக்கிற நல்லுறவை சீர்குலைத்து வருகிறது.
மேலும், முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்காகக் கேரள அரசு பசுமை தீர்ப்பாயத்திடமும், மத்திய நீர்வளத்துறையிடமும் அனுமதி பெற்று நில அளவீடு செய்யத் தொடங்கியுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் கேரள அரசுக்கு ஆதரவாகச் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையைத் தயார் செய்ய மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதித்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய அநீதியாகும். கூட்டாட்சி தத்துவத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி மத்திய பாஜக அரசின் இந்த முடிவு தமிழகத்தின் நீர்ப்பாசன உரிமைகளைப் பறிக்கிற செயலாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகக் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரள அரசுக்கு வழங்கிய தாக்க மதிப்பீட்டு வரைவுக்கான அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த எடுத்த முயற்சிகளுக்குக் கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்த உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.
ஆனால், அதற்குத் தீங்கு விளைவிக்கிற வகையில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான முயற்சிக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஆதரவாகச் செயல்படுவதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாகக் கேரள அரசு புதிய அணை கட்டுகிற முயற்சியை முற்றிலும் தடுக்கிற வகையில், மத்திய அரசோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.