மொஹரம் பண்டிகை அக்.24-ம் தேதிக்கு மாற்றம்: மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் 23-ம் தேதி செயல்படும்

மொஹரம் பண்டிகை அக்.24-ம் தேதிக்கு மாற்றம்: மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் 23-ம் தேதி செயல்படும்
Updated on
1 min read

மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மொஹரம் பண்டிகைக்கு வரும் சனிக்கிழமை (24-ம் தேதி) விடுமுறை என அறிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு அலுவலகங்களுக்கும் மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‛‛மொஹரம் பண்டிகைக்கான விடுமுறையை அக்.23-ம் தேதியில் இருந்து அக்.24-ம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, மொஹரத்துக்கான விடுமுறையை மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழு 24-ம் தேதிக்கு மாற்றி அமைத்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை வழக்கம்போல் செயல்படும்’’ என தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, வங்கிகளுக்கும் மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொதுத்துறை வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொதுவாக வங்கிகளுக்கு அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆயுதபூஜை, மொஹரம் பண்டிகை மற்றும் வார விடுப்பு காரணமாக அக்.21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு மொஹரம் பண்டிகைக்கு 23-ம் தேதி வெள்ளிக்கிழமைக்கு பதிலாக 24-ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது. இதை ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு அன்றைய தினம் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளிக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இதன் மூலம், வங்கிகளின் தொடர் விடுமுறையால் தங்களால் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என அச்சம் அடைந்த வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in