

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் உயர் அதிகாரிகளுடன் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை கடந்த அக்.28-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் இதுவரை இயல்பான மழையான 352.6 மி.மீ.க்கு பதிலாக, தற்போது 301.8 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பைவிட 14 சதவீதம் குறைவு. சென்னை, திருப்பத்தூர், விருதுநகர் மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், கோவை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 18 மாவட்டங்களில் இயல்பான அளவும், மற்ற 16 மாவட்டங்களில் குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது.
வானிலை மைய அறிக்கைப்படி, தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று டிச.2-ம் தேதி தென் தமிழக கடற்கரையை அடைய வாய்ப்பு உள்ளது. டிச.1-ம் தேதி முதல் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
எனவே, வருவாய் நிர்வாக ஆணையரின் அறிவுறுத்தல்படி, துணை ஆட்சியர் தலைமையில் பல்துறை அலுவலர்களுடன், மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மாவட்டஅளவில் துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
புயல் சேதங்களை பார்வையிடவரும் மத்திய குழுவினர் தமிழகமுதல்வர், தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள்.
உயர் நீதிமன்றம் அளித்த அறிவுரைப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், மழைநீர் தேங்கும் பகுதிகள் பெருமளவு குறைந்துள்ளது. நிவர் புயல் தாக்கியபோது, அரசுக்கு ஒத்துழைப்பு அளித்ததுபோல, புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையிலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருந்துஅரசின் அறிவுரைகளை பின்பற்றவேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் அச்சம் அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.