Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM

‘அன்பார்ந்த வாக்காளர்களே!’: அசர வைக்கும் அழைப்பிதழ் கடலூர் கோட்டத்தில் வித்தியாச முயற்சி

கடலூர் வட்டாரத்தில் புதுமையான முறையில் விநியோகிக்கப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த முகாமுக்கான அழைப்பிதழ்.

விருத்தாசலம்

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் கடந்த நவ.16-ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் தொடங்கியது. டிச.15 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. நிலைய வாக்குச் சாவடிகளில் கடந்த நவ.21, 22 ஆகிய நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நிலையில், வரும் டிச.12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் இச்சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

18 வயது நிரம்பியோர் தங்கள்பெயரை இப்பட்டியலில் சேர்க்கலாம். ஏற்கெனவே இடம் பெற்றிருக்கும் வாக்காளர் தங்களின் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதலை இதில் மேற்கொள்ளலாம்.

இம்முகாம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் ‘வாக்காளர் அழைப்பிதழ்’ என்ற தலைப்பில் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அச்சு அசலாக ஒரு திருமண அழைப்பிதழ்போல் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த அழைப்பிதழில், வாக்காளர் சுருக்கமுறை திருத்த முகாம் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இதுபற்றி கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீசனிடம் கேட்டபோது, “18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. அவர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற எங்களால் ஆன சிறு முயற்சி இது. எந்தவொரு விஷயத்தையும் புது மாதிரியாக யோசித்துசெயல்படுத்தும்போது, அது மக்களை எளிதில் சென்றடைகிறது. அதனால், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான தகவல்களை அழைப்பிதழ் வடிவில் கொடுத்துள்ளோம்.

கடலூர் கோட்டத்துக்கு உட்பட்ட கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய 3 வட்டங்களில் இதை செயல்படுத்தியிருக்கிறோம். ஒருவட்டத்துக்கு 1,000 அழைப்பிதழ்கள் வீதம் 3 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சிட்டு விநியோகித்து வருகிறோம். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x