Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM

தூத்துக்குடி, நெல்லை, குமரியில் விசைப்படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தம்: புயல் எச்சரிக்கையால் குஜராத், மும்பையில் கரை சேர்ந்த மீனவர்கள்

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. துறைமுகத்தில் பத்திரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

வங்கக்கடலில் புதிய புயல் இன்று உருவாக உள்ளதை தொடர்ந்து, தூத்துக்குடி, நெல்லை, குமரியில் விசைப்படகுகள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை தாழ்வு மண்டலமாக மாறி தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது. அது, இன்று காலை புயலாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நாளை மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும்.

இதனால், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உட்பட தென் மாவட்டங்களில் இன்று முதல் வரும் 3-ம் தேதி வரை கனமழை பெய்யும். மீனவர்கள் யாரும் வரும் 4-ம் தேதிவரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரிகள் அனைத்து கடலோர கிராமங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 400விசைப்படகுகள், திருநெல்வேலியில் 240 மற்றும் கன்னியாகுமரியில் 450 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் தங்களது நாட்டுப்படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.

ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற விசைப்படகுகளுக்கு புயல் எச்சரிக்கை தொடர்பாக சாட்டிலைட் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடியைச் சேர்ந்த 20 படகுகள் நேற்று காலை கரை திரும்பின. கன்னியாகுமரியைச் சேர்ந்த 92 படகுகள் குஜராத் மற்றும் மும்பையில் கரை சேர்ந்துள்ளன.

புதிய புயல் உருவாகவுள்ளதை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், புயல் மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x