

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், குடியாத்தம் போடிப்பேட்டை கோபால் நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ், இவரது மனைவி நதியா(31). மகள்கள் நிவிதா(11), ஹர்ஷினி(8) ஆகியோர் கவுன்டன்யா ஆற்றின் கரையோரத்தில் வசித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் வெள்ளநீரை பார்ப்பதற்காக நதியா, தனது 2 மகள்களுடன் கவுன்டன்யா ஆற்றங்கரையோரத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது, தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த நிவிதா மற்றும் ஹர்ஷினி ஆகிய இருவரும் திடீரென தண்ணீரில் மூழ்கியதால் அதிர்ச்சியடைந்த நதியா, அவர்களை காப்பாற்ற சென்றுள்ளார். அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்புப் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் 3 பேரின் உடல்களை மீட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். போடிப்பேட்டை தடுப்பணை அருகே மணல் கொள்ளையால் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கியே 3 பேரும் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.