வாராந்திர பரேடு நிகழ்ச்சியால் மன நெருக்கடியில் போலீஸார்: முறையை மாற்றியமைக்க கோரிக்கை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வாராந்திர பரேடு நிகழ்ச்சியால் மன நெருக்கடியில் தவித்து வரும் போலீஸார், நடைமுறையை மாற்றியமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் பணி யாற்றும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், காவலர், உளவுப் பிரிவு காவலர் என 10-க்கும் மேற்பட்ட போலீஸார் இது தொடர்பாக கூறியதாவது:

போலீஸாருக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய பரேடு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. போலீஸார் தங்களின் உடல் திறனை தொடர்ந்து நிர்வகிக்கும் பொருட்டு பரேடு முறை பின்பற்றப்படுகிறது. காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி அண்மைக் காலமாக சனிக்கிழமை காலை 70 சதவீதம் போலீஸாரும், அன்று விடுபட்ட போலீஸார் செவ்வாய் கிழமையிலும் பரேடு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற முறை கடைபிடிக்கப்படுகிறது.

பரேடு நாளில் காலை 6.30 மணிக்கு குறிப்பிட்ட வளாகத்தில் போலீஸார் ஆஜராக வேண்டும். 1 மணி நேரம் பரேடு நிகழ்ச்சி நடத்தப்படும். முன்பு அந்தந்த காவல் நிலையங்களிலேயே இந்த பரேடு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது. தற்போது, அந்தந்த டிஎஸ்பி உட்கோட்டத்துக்கு உட்பட்ட காவல் நிலைய போலீஸார் அனைவரும் உட்கோட்ட தலைமையகத்தில் உள்ள மைதானத்தில் நடக்கும் பரேடு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறோம். தொலைவில் அமைந்துள்ள காவல் நிலையங் களின் போலீஸார் உட்கோட்ட தலைமையகத்துக்கு காலை 6.30 மணிக்கு சென்று சேர 5 மணிக்கு முன்பே புறப்பட வேண்டும்.

மேலும், முதல் நாளில் இரவுப் பணி மேற்கொண்டவர்கள் உள்ளிட்டோர் நெருக்கடியான சூழலில் பரேடு நிகழ்ச்சிக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அவசர கதியில் செல்லும்போது பலர் சிறு சிறு விபத்துகளிலும் சிக்கி யுள்ளனர். போலீஸாருக்கு பரேடு பயிற்சி அவசியம் என்பதை எந்த போலீஸும் மறுக்க மாட்டோம். ஆனால், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றும் போலீஸாருக்கு பரேடு நிகழ்ச்சியும் நெருக்கடி மற்றும் வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தீர்வு தரும் வகையில், அந்தந்த காவல் நிலையங்களிலேயே வாராந்திர பரேடு நிகழ்ச்சி நடத்த காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இது தொடர்பாக, தருமபுரி டிஎஸ்பி அண்ணாதுரையிடம் கேட்டபோது, ‘முன்பு வாரம்தோறும் புதன் கிழமை களில் காவல் நிலையங் களில் பரேடு நிகழ்ச்சி நடந்தது. நீதிமன்ற நடவடிக்கைகள் இல்லாத நாளாக இருந்தால் அதிக போலீஸார் பரேடு நிகழ்ச்சியில் பங்கேற்பர் என்பதற்காக தற்போது சனிக்கிழமையில் பரேடு நடத்த உயர் அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.

அதேபோல, உட்கோட்ட தலைமையகத்தில் பரேடு நடத்த வேண்டும் என்பதும் உயர் அதிகாரிகளின் முடிவே. பல்வேறு நடைமுறை சிரமங்களை தவிர்க்கும் வகையில் அந்தந்த காவல் நிலையங்களிலேயே பரேடு நடத்த வேண்டும் என்பது போலீஸார் பலரின் எதிர்பார்ப் பாகவும் உள்ளது. ஆனால், இது தொடர்பாக உயர் அதிகாரிகள் தான் முடிவெடுக்க முடியும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in