

பிரான்சில் நடக்கும் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்கும் சென்னை வீராங்கனை சி.ஏ.பவானிதேவிக்கு ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானிதேவி, கடந்த 2014-ம் ஆண்டு பிலிப்பைன்சில் நடந்த ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்த ஆண்டு மங்கோலியாவில் நடந்த சர்வதேச போட்டியில் பங்கேற்று வெண்கலமும், காமன்வெல்த் ஜூனியர் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களையும் அவர் பெற்றுள்ளார். தற்போது அடுத்தாண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்காக அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இம்மாதம் வெனிசுலா மற்றும் பிரான்சில் நடக்கும் வாள்வீச்சு போட்டிகளில் பங்கேற்க நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரி அவர் மனு அளித்தார்.
அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ரூ.3 லட்சம் நிதி உடனடியாக வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.