Published : 30 Nov 2020 08:22 PM
Last Updated : 30 Nov 2020 08:22 PM

ஜன.5 வரை திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனைக் கைது செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு 

நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனைக் கைது செய்யக்கூடாது என்ற உத்தரவை வரும் ஜனவரி 5-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995-ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் ஸ்ரீ நிஷா ஆகியோர் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி சிபிசிஐடி போலீஸாரின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகினர். அதேபோல கடந்த 12-ம் தேதி சிபிசிஐடி போலீஸார், ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குத் தொடர்பாக சென்னை பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்களை ஆராய்ந்தனர்.

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், அதுவரை வழக்கில் தொடர்புடைய ஜெகத்ரட்சகனைக் கைது செய்யக்கூடாது எனக் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி போலீஸார் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை ஜெகத்ரட்சகனைக் கைது செய்யக்கூடாது என ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், இவ்வழக்கின் விசாரணை முடியும் வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் எனவும் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x