பணி மேம்பாட்டு நேர்காணலைத் தடுக்க முயற்சி: பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு 

பணி மேம்பாட்டு நேர்காணலைத் தடுக்க முயற்சி: பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு 
Updated on
1 min read

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவி மற்றும் இணைப் பேராசிரியர்களின் பணி மேம்பாட்டுக்கு நடைபெறவுள்ள நேர்காணலைச் சில துறைத்தலைவர்கள் தடுக்க முயல்வதாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கத் தலைவர் ஆர். சக்திவேல், செயலாளர் கே.வெற்றிவேல் ஆகியோர் இன்று வெளியிட்ட அறிக்கை :

''பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களின் பணி மேம்பாட்டுக்கு முறையாகக் கடந்த மே மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டுக்கான நேர்காணல் டிச.3-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தப் பணி மேம்பாடு வழங்கலுக்கான முயற்சிக்குப் பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு, பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் ஒப்புதல் பெற்றும், தமிழக அரசு நியமித்த உறுப்பினரின் மேற்பார்வையிலும் பணி மேம்பாட்டுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது.

இந்தப் பணி மேம்பாடு மற்றும் ஆய்வு வளர்ச்சிக்காகத் துணைவேந்தர் எடுத்துள்ள முயற்சியானது இளைய தலைமுறை ஆசிரியர்களின் ஆராய்ச்சிப் பணி வளர்ச்சிக்கு மேலும் உந்துதலைத் தரும். இதன் விளைவாக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குப் பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதியும், பிற ஆய்வுத் திட்டங்களுக்கான நிதியும், கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. அத்துடன் ஆராய்ச்சி மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து மாணவ சமுதாயமும் பயன்பெற்றுக் கல்வி வளர்ச்சி அடையும்.

இந்த நிலையில், ஏற்கெனவே பணிமூப்பு பெற்று பேராசிரியர்களாகி, துறைத் தலைவராக உள்ள ஒரு சில மூத்த பேராசிரியர்கள் இந்தப் பணி மேம்பாடு நேர்காணல் திட்டமிட்டபடி நடந்தால் இளைய தலைமுறையினர் இணைப் பேராசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணி உயர்வு பெறுவார்கள். அவ்வாறு பதவி உயர்வு பெற்றால் ஏற்கெனவே உள்ள ஆட்சிக்குழுவின் தீர்மானத்தின்படி நடைமுறையில் உள்ள துறைத்தலைவர்கள் பதவியில் சுழற்சி முறையில் மாற்றம் ஏற்படும் என்று அஞ்சி இந்தப் பணி மேம்பாடு நிகழ்வைத் தடுத்து இளைய தலைமுறையினர் வளர்ச்சி அடையாத வண்ணம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in