காட்டுப் பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்: உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

காட்டுப் பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்: உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
Updated on
1 min read

காட்டுப் பன்றிகள் தொல்லையால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்து வருவதால் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களை காட்டுப்பன்றிக் கூட்டம் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனுக்கொடுத்த மானாவாரி விவசாயிகள் மேம்பாட்டுக்குழுத் தலைவர் கருப்பசாமி உள்ளிட்டோர் கூறுகையில், செப்டம்பர் முதல் வாரத்தில் ஆமத்தூர், வெள்ளூர், மருதநத்தம், கவலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் பயிர் சரியான வளர்ச்சி அடையவில்லை.

இருப்பினும் பயிர் தற்போது பூத்து கதிர் வைக்கும் நிலையில் உள்ளது. அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலால் பயிர்கள் மிகுந்த சேதம் அடைந்துள்ளன.

அதைத்தொடர்ந்து தற்போது காட்டுப் பன்றிகள் மற்றும் மான்கள் விளைநிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோளப் பயிர்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டமடைந்து வருகிறோம்.

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு காட்டுப் பன்றிகளை வனத்துறை மூலம் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in