Published : 30 Nov 2020 06:49 PM
Last Updated : 30 Nov 2020 06:49 PM

தென்சென்னை, புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் நிரந்தரத் தீர்வு: சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளைப் பார்வையிட்டு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு  

சென்னை

செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகளிலிருந்து இவர்களை மீட்டெடுத்துக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

நிவர் புயல் காரணமாக தண்ணீர் தேங்கியுள்ள பள்ளிக்கரணை, ஒக்கியம் மடு, முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் நீரை வெளியேற்றுவதற்கான பணிகள் குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தபின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

“அண்மையில் பெய்த கனமழை, புயல் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி அதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். பருவ காலங்களில் பொழிகின்ற கனமழையினால் ஒவ்வொரு முறையும் சென்னை மாநகரம் மற்றும் சென்னை மாநகரை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதால், அப்பகுதிகளிலுள்ள தண்ணீரை வெளியேற்ற நிரந்தரத் தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்வதற்காக நானே நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளேன்.

மேலும், பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளையும் வரவழைத்து அவர்கள் மூலமாக தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய தண்ணீரை அகற்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்று திட்டமிடப்பட்டுள்ளது.

செம்மஞ்சேரி பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி பகுதிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும். தென்சென்னை பகுதிகளான செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி போன்ற பகுதிகளிலிருந்து வரும் மழை நீர் முழுவதும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வந்து சேர்ந்து பின்னர் பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் சேரும்படி இயற்கையாகவே அமைந்துள்ளது.

இதில் ராம் நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் 2004ஆம் ஆண்டு 80 சதவீதத்திற்கு மேல் காலியான நிலங்கள் இருந்தன. தற்பொழுது, மக்கள் நெருக்கமாக வாழக்கூடிய குடியிருப்புப் பகுதிகளாக மாறிவிட்டன. வெள்ளம் வடிவதற்கு உண்டான தீர்வாக, இந்தச் சதுப்பு நிலத்திலிருந்து ஒக்கியம் மடு வழியாக பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் கலக்கும் முகத்துவாரம் தற்போது 30 மீட்டர் அகலம் உள்ளதை 100 மீட்டராக அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன.

சதுப்பு நிலத்தை முழுமையாக ஆழப்படுத்தும் காலம் அதிகமாகுமென்பதால் உடனடியாக செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலத்தில் அகலமான பேபிவாய்க்கால்களை ஒக்கியம் மடு வரை பொதுப்பணித் துறை உருவாக்கி வருகிறது. ஒக்கியம் மடுவிலும் இதேபோன்ற ஒரு கால்வாயை பக்கிங்காம் கால்வாய் வரை பொதுப்பணித் துறை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலமாக தாழ்வான பகுதியில் இருக்கிற தண்ணீரை வெளியேற்ற வேண்டுமென்று உத்தரவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது தவிர, வேளச்சேரி பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் ஏறத்தாழ நான்கு கிலோ மீட்டர் சுற்றி பள்ளிக்கரணை வருவதற்குப் பதிலாக, மத்தியப் பகுதியில் அமைகின்ற கால்வாய் மூலமாக நேராக இரண்டு கிலோ மீட்டரில் வருவதுபோல் ஏற்பாடு செய்து, தண்ணீர் தேங்காமல் எளிதாக வெளியேற நடவடிக்கை எடுப்பதற்குத் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

நீண்டகாலத் திட்டமாக, தற்பொழுது கிழக்கு தாம்பரம், மாம்பாக்கம், செம்பாக்கம் போன்ற இடங்களிலிருந்து வரும் மழை நீர், செம்மஞ்சேரி வந்தடைந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் ஒக்கியம் மடு, பக்கிங் கால்வாய், முட்டுக்காடு வழியாகக் கடலில் கலக்கிறது.

மேற்படி நீர்வழித் தடத்திற்கு கூடுதலாகவும், விரைவாகவும் வெள்ள நீர் வடிய ஏதுவாக புதுப்பாக்கம், சிப்காட்-நாவலூர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சாலை மற்றும் துரைப்பாக்கம் சாலையிலிருந்து நேரடியாக பக்கிங்காம் கால்வாய்க்குச் செல்ல பெரிய கால்வாய்களைக் கட்ட வேண்டும் என்பதற்காக என்னுடைய அரசு ரூபாய் 581 கோடி மதிப்பிலான திட்டங்களைச் செயலாக்கம் செய்ய மத்திய அரசின் சிறப்பு நிதி கோரப்பட்டுள்ளது, கிடைக்குமென்று நம்புகிறோம்.

பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வந்து சேர்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால், 3, 4 இடங்களில் கால்வாய்கள் அமைத்து தேங்கியுள்ள தண்ணீரைக் கொண்டு வரும்போது, தண்ணீர் தேங்காத ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசால் திட்டமிட்டுப்பட்டு வருகிறது. இதன்மூலம் பக்கிங்காம் கால்வாய்க்கு வெள்ள நீர் விரைந்து சேர்வதால் மேற்படி தென்சென்னைப் பகுதிகள் முழுவதற்கும் நிரந்தரப் பாதுகாப்பு கிடைக்கும்.

இதனால் இங்கு வசிக்கும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். இவ்வாறு கனமழை பொழிகின்றபொழுது மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தண்ணீர் தேங்குவதால் உள்ளாகும் சிரமத்திற்கு நிரந்தரத் தீர்வு காண அரசால் திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் பாதிக்கப்பட்டு வருவதால், இப்பகுதிகளுக்கு நிரந்தத் தீர்வு காண ஏதுவாகத் திட்டம் செயலாக்கப்பட வேண்டுமென்று கடந்த 28.10.2020 அன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியாளர்கள் மாநாட்டில் நான் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தேன். அதன்படி, இப்பகுதிகளில் மாற்றுக் கால்வாய் மற்றும் அடையாறு ஆற்றின் கரைகளைத் தரம் உயர்த்தும் பணிக்காக ரூபாய் 71.30 கோடி மதிப்பிலான திட்டங்களைச் செயல்படுத்த உலக வங்கித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

எனினும், இப்பணியின் அவசியம் கருதி மாநில நிதியிலிருந்தே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 8 லட்சம் மக்கள், ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுத்துக் காப்பாற்றப்படுவார்கள் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

2015-ம் ஆண்டில் மழை பெய்திருக்கக்கூடிய இடங்கள்தான். இதுவரை செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்ன?

2015-ல் கனமழை பெய்தது. ஆனால், அதற்கும் முன்பே, கடந்த காலங்களிலும் தண்ணீர் தேங்கித்தான் இருந்தது. நாங்கள் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் படிப்படியாகத் தண்ணீரை அகற்றி வருகிறோம். அவ்வாறு ஒவ்வொரு பகுதியிலுமுள்ள தண்ணீரை அகற்றத் தேவையான நிதி ஆதாரம் அரசுக்குத் தேவை. நிதி ஆதாரம் இருந்தால்தான் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை, 2015ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால், தற்பொழுது அந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, சென்னை மாநகரம் மற்றும் மாநகரத்தை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலெல்லாம் தண்ணீரை அகற்றக்கூடிய சூழ்நிலையை நீங்களே கண்டிருப்பீர்கள்.

இந்தப் பணிகளைப் படிப்படியாக நிறைவேற்றிய காரணத்தால்தான் தற்பொழுது குறைவான அளவிலேயே தண்ணீர் தேங்கியுள்ளது. ஒரு நீண்டகாலத் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உடனே அனைத்தையும் செய்துவிட முடியாது. அதனைச் செயல்படுத்தத் தேவையான நிதி ஆதாரம் மிக முக்கியம். கடந்த காலங்களில் சென்னை மாநகரில் ஏறத்தாழ 3,000 இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்த நிலை தற்பொழுது படிப்படியாக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காகத்தான் நானே நேரடியாக வந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வரவழைத்து இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

ஒவ்வொரு கனமழைக்கும் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. நீர்நிலைகளை ஒட்டியிருக்கக்கூடிய பகுதிகளில் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்காமல் இருந்தால் இந்தப் பிரச்சினைகள் வந்திருக்காது.

2004ஆம் ஆண்டு ராம் நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் 20 சதவிகித வீடுகள்தான் இருந்தன. தற்பொழுது 80 சதவீதம் வீடுகள் உள்ளன. இவை தாழ்வான பகுதிகள். நீர்நிலைகள் உள்ள பகுதிகள். இந்த இடத்தில் கட்டியதால்தான் இவ்வளவு சிரமம். அவ்வாறு சிரமம் இருந்தாலும், மக்களைக் காக்க வேண்டுமென்பதற்காக, இதற்கு ஒரு முழுமையான தீர்வு காண அரசு நீண்டகாலத் திட்டமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்பட்டு படகுகள் விடப்படுமென்று தமிழக அரசுதான் அதற்கான நிதி ஒதுக்கியது. அதற்கான வேலைகள் எந்த அளவில் உள்ளன?

இத்திட்டங்களை நிறைவேற்ற நிதி தேவை. அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்துவிட முடியாது. படிப்படியாகத்தான் செயல்படுத்த முடியும். முதலில் முக்கியமான பிரச்சினைக்குத்தான் தீர்வு காண வேண்டும். தற்பொழுது 3,000 இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நிதி தேவையென்பதால் அதற்கான திட்டங்களைப் படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும். மேலும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஏதும் கைவிடப்படாது.

அரசிடம் நிதியில்லையா? மத்திய அரசின் நிதி ஆதாரத்தின் மூலமாகவாவது செயல்படுத்த முடியுமா?

இந்தியாவிலிருக்கிற எந்த மாநிலத்திலும் நிதி இல்லை. அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரிதான் உள்ளது. உலக அளவிலேயும் கிடையாதென்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். உலக வங்கித் திட்டம் மற்றும் மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கித்தான் ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். எல்லா மாநிலங்களும் நிதியை வைத்துக் கொண்டு எந்தத் திட்டத்தையும் அறிவிப்பது கிடையாது.

அவ்வப்போது ஏற்படுகின்ற பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இருக்கின்ற நிதியை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவேதான், சென்னை மாநகரத்தில் 3,000 இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தன. அதற்குண்டான நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக அதைக் குறைத்திருக்கிறோம். இன்றைக்குக் கூட 1,000 கிலோ மீட்டருக்கு மேல் சாக்கடை வடிகால் (டிரைனேஜ்) கட்டியிருக்கிறோம். வடிகால் வசதி செய்திருக்கிறோம். மேலும் வடிகால் வசதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுத் தொடர்ந்து அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று கூறியிருக்கிறீர்களே. குழு ஏதும் அமைத்திருக்கிறீர்களா?

இன்றைக்குத்தான் நான் நேரில் வந்து பார்த்திருக்கிறேன். நேரில் பார்த்தால்தான் தாழ்வான பகுதிகளிலிருக்கின்ற தண்ணீரை எப்படி நாம் வெளியேற்றுவது என்பது தெரியும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இங்கு வந்திருக்கிறார்கள். அந்த அதிகாரிகள் குழு அதை ஆய்வு செய்து அதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்கும்.

நிரந்தரத் தீர்வு எட்டுவதற்கு, தோராயமாக எத்தனை ஆண்டுகள் ஆகும்?

இந்தப் பணியைத் தொடங்கியிருக்கிறோம். அந்தப் பணி செய்வதற்கு எவ்வளவு கால அளவு வேண்டுமென்பதை அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நிர்ணயிப்பார்கள். அந்தக் கால அளவிற்குள் இந்தப் பணி நிறைவு செய்யப்படும். அனைத்துப் பணிகளும் திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதைப் போல இந்தப் பணியும் திட்டமிட்டுச் செயல்படுத்தப்படும்.

கிருஷ்ணா நதியிலிருந்து அதிகப்படியான நீர் வெளியாகிறது, காவேரி ஆற்றிற்கு கொடுக்கக்கூடிய முன்னுரிமையை அதிமுக அரசு, பாலாற்றுக்கு கொடுக்கவில்லையென்று வருகின்ற குற்றச்சாட்டு குறித்து?

பாலாற்றில் பல திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருக்கிறது. நான் ஏற்கெனவே கூறியதைப் போன்று நிதி ஆதாரம் மிக முக்கியம். இன்றைக்கு, பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுப்பதற்குத்தான் அதிமுக அரசு, ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கி, மூன்றாண்டு காலத் திட்டத்தில் பல இடங்களில் தடுப்பணை கட்டி இப்பொழுது தண்ணீர் நிறைந்திருக்கிறது.

தற்பொழுதுகூட, பவானிசாகரில் இருக்கின்ற 6 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம், ஒரு இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கு இன்று அரசாணை வெளியிட்டோம்.

அதேபோல, இதற்கென்று நீர் மேலாண்மைப்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற 2 தலைமைப் பொறியாளர்கள், 3 கண்காணிப்புப் பொறியாளர்கள் என 5 பொறியாளர்களை நியமித்து, தமிழ்நாடு முழுவதும் பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாவதைச் சேமிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்வது, எங்கெங்கெல்லாம் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கணக்கிட்டு, அவர்கள் கொடுக்கின்ற அறிக்கையின்படி இப்பொழுது ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

ஏறத்தாழ 85, 90 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அடுத்து ரூபாய் 1,000 கோடி ஒதுக்கீடு செய்து ஆங்காங்கே தடுப்பணை கட்டுவோம். இதற்கு முன்பு எத்தனை தடுப்பணை கட்டினார்கள்? நான் வந்தபிறகு தானே தடுப்பணையே கட்ட ஆரம்பித்திருக்கிறோம், அதேபோல தூர்வாரியிருக்கிறோம். அதேபோல, பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள 14,000 ஏரிகள் மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள 26,000 ஏரிகள் என 40,000 ஏரிகள் இருக்கின்றன.

இந்த 40,000 ஏரிகளை ஒரே நேரத்தில் தூர்வாருவது என்பது இயலாத ஒன்று, அதற்கு நிதி தேவை. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட ஏரிகளை எடுத்து, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, தூர்வாருகின்ற பணியில் நாங்கள் செயல்பட்டிருக்கிறோம். இப்படி தூர்வாரிய காரணத்தினால்தான், பல ஏரிகள் இன்றைக்கு நிரம்பிக் காட்சியளிக்கின்றன. அதேபோல, படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் எஞ்சிய ஏரிகள் அனைத்திற்கும் வேண்டிய நிதி ஒதுக்கீடு செய்து, தூர்வாரப்படும்.

நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முதலிடம் வந்திருக்கிறது. குடிமராமத்துப் பணி சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். சென்னையிலுள்ள நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசு என்ன செய்ய இருக்கிறது?

சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளைத் தூர்வார வேண்டுமென்பதற்காக ரெவின்யூ மாடலில் டெண்டர் விட்டுள்ளோம். அதில் தண்ணீர் இருந்ததால் எடுக்க முடியவில்லை. நான்கு ஏரிகளுக்கும் டெண்டர் விட்டுவிட்டோம். அதன் மூலமாக அரசாங்கத்திற்கு வருவாய் வருகிறது. இப்பொழுது நீர் நிரம்பியிருப்பதால், அந்தப் பணியை மேற்கொள்ளாமல் இருக்கிறோம். பூண்டி ஏரியைப் பொறுத்தவரை, தனிப்பட்ட ஒருவர் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x