மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மீது புகார்: மதுரை திமுகவினரிடம் எ.வ.வேலு விசாரணை

மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மீது புகார்: மதுரை திமுகவினரிடம் எ.வ.வேலு விசாரணை
Updated on
1 min read

மதுரையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து இன்று மதுரையில் எ.வ.வேலு விசாரணை நடத்தி வருகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுகவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டப் பிரிப்பைப் போலவே, தமிழகத்தையும் 4 மண்டலங்களாகப் பிரித்து வடக்கு ஆ.ராசா, தெற்கு எ.வ.வேலு, கொங்கு சக்கரபாணி எம்எல்ஏ, டெல்டா தொ.மு.ச. சண்முகம் ஆகியோர் மண்டலத் திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்குக் கட்டுப்பட்டவர்கள்.

மதுரை திமுகவில் ஏற்கெனவே இருக்கிற மூன்று மாவட்டங்களைப் பிரிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக மதுரை மாநகர் திமுகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்பு மற்றும் கட்சியினரின் செயல்பாடு குறித்துக் கருத்துக் கேட்க வந்திருந்த ஐபேக் குழுவினரிடம் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன.

குறிப்பாக மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி செயல்படாத நபர் என்றும், தொடர்ந்து 3 முறை அவர் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் என்றும் வேலுச்சாமி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ உள்ளிட்டோர் புகார் கொடுத்திருந்தார்கள். அதேபோல புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி கட்சியினரை மதிப்பதில்லை என்றும், அதிமுக அமைச்சர்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் புகார் கூறப்பட்டது. புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் மீது, முன்னாள் திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் லதா அதியமான் உள்ளிட்டோர் புகார் கூறியிருந்தார்கள்.

இந்தப் புகார்கள் குறித்து விசாரிப்பதற்காகத் திமுகவின் தென்மண்டலத் தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு இன்று மதுரை வந்தார். மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கோ.தளபதிக்குச் சொந்தமான கோபால்சாமி திருமண மண்டபத்தில் விசாரணை நடந்தது. புகார் கூறிய திமுகவினரையும், புகாருக்கு உள்ளான நிர்வாகிகளையும் தனித்தனியே விசாரித்தார். சிலரை ஒன்றாக அமர வைத்துச் சமரசப்படுத்தினார்.

காலை 10 மணிக்குத் தொடங்கிய விசாரணை, மாலை 6 மணிக்குப் பிறகும் தொடர்ந்தது. கடந்த தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே திமுக வெற்றி பெற்றதால், 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க வேண்டும் என்று கூட்டத்தில் பல நிர்வாகிகள் கோரிக்கை வைத்தார்கள். எனவே, மதுரை மாவட்ட திமுக மேலும் பிரிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in