Last Updated : 30 Nov, 2020 06:04 PM

 

Published : 30 Nov 2020 06:04 PM
Last Updated : 30 Nov 2020 06:04 PM

நெல்லை மாவட்டத்தில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை: ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறப்பு

நெல்லை மாவட்டத்தில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வங்கக்கடலின் மத்திய பகுதியின் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக நாளை முதல் (இன்று) திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிக கனமழை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

எனவே, ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களும் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடத்திற்கு குடிப்பெயர வேண்டும். பழமையான இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களின் வசிப்போர் அக்கட்டிடங்களிலிருந்து வெளியேறி பாதுகாப்பான கட்டிடங்களில் குடியேறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதி கனமழை ஏற்படும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் குடிபெயருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிரம்பும் தருவாயில் உள்ள குளங்கள் அனைத்தும் வருவாய் துறை, பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி துறையினரால் சேதமடையாத வண்ணம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் அரசால் மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் தேவைப்படின் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் அறிவிப்புக்கு ஏற்ப அவர்கள் பாதுகாப்பாக குடியேறும் வண்ணம் திசையன்விளை மற்றும் ராதாபுரம் வட்டங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பல்நோக்கு நிவாரண மையங்களில் குடியேறுமாறும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பாதுகாப்பு நிமித்தம் தற்காலிக நிவாரண முகாம்களிலும், பல்நோக்கு நிவாரண மையங்களிலும் தங்கும் மக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றிடவும், முககவசம் அணிந்திடவும், மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள கோவிட்-19 வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக ஏற்படும் பேரிடரினை தெரிவித்திட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 24 மணிநேரம் செயல்படும் அவசரகால சேவை மைய தொலைபேசி எண் 0462 2501070 மற்றும் 0462 2500191 -ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆட்சியர் அலுவலகத்துக்கும் அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம். வாட்ஸ்அப் எண்கள்:

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்- 63740 01902, திருநெல்வேலி- 94450 00671, பாளையங்கோட்டை- 94450 00669, மானூர்- 94422 14727, சேரன்மகாதேவி- 97515 01322, அம்பாசமுத்திரம்- 94450 00672, நாங்குநேரி- 90805 89731, ராதாபுரம்- 96777 81680, திசையன்விளை-99443 06770.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x