

மத்திய வேளாண்மை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் திண்டுக்கல், பழநியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
பி.எஸ்.என்.எல்.,அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போலீஸாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை தூக்கிச்சென்று போலீஸார் வேனில் ஏற்றினர். முற்றுகைப்போராட்டத்தில் நகர செயலாளர் ஆசாத், ஒன்றிய செயலாளர் அஜய்கோஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேளாண்மை சட்டங்களை மத்திய அரசு வாபஸ்பெறவேண்டும்.
கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக இந்த சட்டம் உள்ளது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் மீது தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட மத்திய அரமை வன்மையாக கண்டிக்கிறேன். வேளாண் சட்டங்களை வாபஸ்பெறும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்து போராடும், என்றார்.
பழநி:
பழநியில் ஸ்டேட் வங்கி முன்பாக நடைபெற்ற முற்றுகைப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை வகித்தார்.
நகரச் செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.