தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு முதல் முறையாக இரு திருநங்கைகள் தேர்வு: பணிநியமன ஆணைகளை எஸ்.பி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கைகள் அக்க்ஷயா, ஸ்ரீஜா ஆகியோருக்கு பணிநிமன ஆணைகளை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வழங்கினார். படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கைகள் அக்க்ஷயா, ஸ்ரீஜா ஆகியோருக்கு பணிநிமன ஆணைகளை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் வழங்கினார். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் முதன் முறையாக ஊர்க்காவல் படைக்கு இரண்டு திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை எஸ்பி எஸ்.ஜெயக்குமார் இன்று வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு புதிதாக 40 பேரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் கடந்த 24-ம் தேதி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 100 பெண் விண்ணப்பதாரர்கள் உள்ளிட்ட 695 பேர் கலந்து கொண்டனர். அவர்களகுக்கு உயரம், கல்வித் தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு 40 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

31 ஆண்கள், 7 பெண்கள், 2 திருநங்கைகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். அக்க்ஷயா, ஸ்ரீஜா ஆகிய இரு திருங்கைகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 40 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி அறிவுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்பி கூறியதாவது: தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மாவட்டத்தில் முதல் முறையாக இரு திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். இவர்கள் 40 பேருக்கும் 45 நாட்கள் பயிற்சி இன்று (டிச.1) முதல் நடைபெறுகிறது. அதன் பிறகு போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், முக்கிய நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்க தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அருகே நடுக்கடலில் ஹெராயின் போதை பொருள் பிடிப்பட்டது தொடர்பாக தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்க ஆண்டு இதுவரை 111 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் என்றார் எஸ்பி.

நிகழ்ச்சியில் கூடுதல் கண்காணிப்பாளர்கள் கோபி, செல்வன், தூத்துக்குடி ஊர்க்காவல்படை தளவாய் பாலமுருகன், துணை தளவாய் கவுசல்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in