

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் போலீஸார் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நாகர்கோவிலில் போலீஸார் நடத்திய திடீர் கொடி அணிவகுப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் நெருங்குவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல கோரிக்கைகளை முன்வைத்து பரவலாக அரசியல் கட்சியினர் போராட்டம், மற்றும் சாலை மறியல் போன்றவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
அனுமதி இன்றி நடத்தப்படும் இப்போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் கரோனா ஊரடங்கை மீறி பொது இடங்களிலும் அதிகமானோர் கூடுவது அதிகரித்து வருகிறது.
இவற்றை கட்டுப்படுத்தும் வகையிலும், மாவட்டம் முழுவதும் குற்ற நிகழ்வுகளை தடுக்கவும், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ம் தேதி நெருங்குதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸார் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நாகர்கோவிலில் இன்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பு நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பிருந்து தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில் முடிவடைந்தது.
கொடி அணிவகுப்பில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் வேணுகோபால், கல்யாணகுமார், கணேசன், பீட்டர்பால், வேதமாணிக்கம், பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீஷ் பயிற்சி டிஎஸ்பி வடிவேல் உட்பட 135 போலீஸார் கலந்துகொண்டனர். போலீஸாரின் திடீர் கொடி அணிவகுப்பால் நாகர்கோவிலில் இன்று பரபரப்பு நிலவியது.