

விவசாயிகள் வன்முறையின்றி, அறவழியில் போராட்டம் செய்வதை மத்திய அரசு அனுமதிப்பதுதான் ஜனநாயக வழி முறையாகும். அடக்குமுறைகளால் மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளினால் இத்தகைய எழுச்சி நாடு தழுவியும் பரவக்கூடும் என கி.வீரமணி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை:
''அண்மையில் நாடாளுமன்றத்தில் அவசரக் கோலத்தில், பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண்மை மசோதாக்கள் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் விவசாயிகளின் நலனை அடகு வைப்பதாக உள்ளது என்பதை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் தொடர்ந்து அறவழியில் ரயில் போராட்டம் முதலில் தொடங்கியது.
இப்போது ‘டெல்லி சலோ’ என்று டெல்லியை நோக்கிய போராட்டம் - நியாயமான போராட்டம் - வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெறும் வரையில் நீடிக்கும் என்ற திடமான முடிவோடு பல்லாயிரக்கணக்கில் திரண்டு, உணவு ஏற்பாடுகளுடன் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர்.
காவல்துறையினரின் தண்ணீர் வீச்சு, கண்ணீர்ப் புகை விவசாயிகளின் உறுதியைக் குலைக்காது. மத்திய அரசு உள்ளே விட மறுத்து, பிறகு வேறு வழியின்றி அனுமதித்தது. இப்போது எங்கோ ஒரு பகுதிக்கு தள்ளி - இடம் தருகிறோம் என்று கூறியதை விவசாயிகள் ஏற்கவில்லை.
ராம் லீலா மைதானம், ஜந்தர் மந்தர் மைதானம் ஆகிய இடங்களைக் கேட்கிறார்கள் போராட்டத்திற்கு. இதை அளிப்பதில் மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டவேண்டும்?
வன்முறையின்றி, அறவழியில் போராட்டம் செய்வதை மத்திய அரசு அனுமதிப்பதுதான் ஜனநாயக வழிமுறையாகும்! அடக்குமுறைகளால் மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளி - இது ஜனநாயக அரசு என்பதை மறக்கக் கூடாது. இத்தகைய எழுச்சி நாடு தழுவியும் பரவக்கூடும்.''
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.