

பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்க கூட்டுறவு சங்கத் தலைவர் கமிஷன் கேட்பதாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2016-17ம் ஆண்டில் சாகுபடி செய்த பயிர்களுக்கு காப்பீடு செய்திருந்தோம். மகேந்திரவாடி கூட்டறவு கடன் சங்கத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் சேதத்துக்காக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3995 மட்டுமே வழங்கப்பட்டது. இது தொடர்பாக மருதங்கிணறு கிராம விவசாயிகள் ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தோம்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏக்கர் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரம் காப்பீட்டுத் தொகை வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அந்தந்த விவசாயிகளுக்கு வழங்க வங்கிக் கணக்கு புத்தக நகலை கொண்டுவரும்படி கூட்டுறவு சங்க செயலாளர் கூறினார். அதன்படி, கடந்த 27-ம் தேதி வங்கிக் கணக்கு புத்தக நகலை கொண்டு சென்றோம்.
அப்போது, தனது அனுமதி இல்லாமல் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கக் கூடாது என கூறி கூட்டுறவு சங்கத் தலைவர் வாக்குவாதம் செய்ததால் விவசாயிகளிடம் வங்கிக் கணக்கு புத்தக நகலை செயலாளர் பெறவில்லை. 20 சதவீத கமிஷன் கொடுத்தால்தான் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும், இல்லாவிட்டால் வந்த பணத்தை திருப்பி அனுப்பிவிடுவேன் என்றும் கூட்டுறவு சங்கத் தலைவர் கூறுகிறார்.
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூட்டுறவு சங்கத் தலைவர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.