

தென்காசி மாவட்டம் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட மாவட்டம். இதனால், விவசாயம் சார்ந்த தொழில்களும் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இயந்திரமயமாக்கல் அதிகரிப்பதற்கு முன்பு மாட்டு வண்டி தயாரிப்பது, மாட்டுக்கு லாடம் அடிப்பது, விவசாய பணிகளுக்குத் தேவையான களைகொத்தி, பன்னரிவாள் (கருக்கரிவாள்), மண்வெட்டி, கலப்பை, தண்ணீர் இறைப்பதற்குத் தேவையான சாதனங்கள் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வந்தன.
தென்காசி பகுதியில் விவசாய உபகரணங்கள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.விவசாயப் பணிகளில் இயந்திரமயமாக்கல் அதிகரிக்கத் தொடங்கியவுடன் அதைச் சார்ந்த பல்வேறு தொழில்களும் நலிவடைந்து காணாமல் போய் விட்டன. தற்போது மாட்டு வண்டி களைப் பார்ப்பதே அரிதாகிப் போய்விட்டது. மாடு களுக்கு லாடம் அடிக்கும் தொழிலும் காணாமல் போய் விட்டது. இதேபோல், விவசாய உபகரணங்களான மண் வெட்டி, களைகொத்தி, பன்னரிவாள் உள்ளிட்டவைகளை செய்யும் தொழிலும் நலிவடைந்து வருகிறது.
வருமானம் இல்லை
இதுகுறித்து சுரண்டையைச் சேர்ந்த சங்கர் கூறும்போது, “எங்கள் தாத்தா காலத்தில் இருந்தே சுமார் 50 ஆண்டுகளாக விவசாயத்துக்கு தேவையான இரும்புப் பொருட்கள் செய்யும் தொழில் செய்து வருகிறோம். சுரண்டையில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர். டிராக்டர், நடவு இயந்திரம், களையெடுக்கும் இயந்திரம் என இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்துவிட்டதால் எங்களுக்கு வேலை வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இயந்திரங்கள் மூலம் வேலைகள் சுலபமாகவும், விரைவாகவும் நடைபெறுவதாலும், வேலையாட் கள் தட்டுப்பாடு காரணமாகவும் விவசாயிகள் இயந்திரங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது சுரண்டையில் வெகு சிலரே விவசாய வேலைகளுக்கான பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருசில பொருட்கள் மட்டுமே விற்பனையாகின்றன. இதனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. பெரும்பாலானோர் மாற்று வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். அரசு பல்வேறு தொழிலாளர்களுக்கு சலுகைகள், மானியத்துடன் கடனு தவிகளை வழங்கி வருகிறது. அதேபோல், எங்களுக்கும் மானியத்துடன் கடனுதவி வழங்கினால் உதவியாக இருக்கும்” என்றார்.