

அரசியல் அறிவிப்பு குறித்து ஆலோசிக்க ரஜினி மக்கள் மன்றத் தலைவர், செயலாளர்களுடன் ரஜினி 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், அரசியல் கட்சி தொடங்குவது குறித்த நிலைப்பாடு பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
2016-ம் ஆண்டு தமிழக அரசியல் களத்தில் 2 முக்கிய மாறுதல்கள் நடந்தன. இருபெரும் தலைவர்களில் ஆட்சியிலிருந்த ஒருவரின் மரணம், எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தலைவரின் வயோதிகத்தால் வந்த அரசியல் முடக்கம். இதனால் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. சிலர் அதை வெற்றிடம் எனக் கருத்துத் தெரிவித்தனர்.
96-ல் திமுகவுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்த ரஜினி, அதன்பின் நேரடி அர்சியல் செயல்பாட்டில் ஈடுபடாமல் திமுக, அதிமுகவைச் சமதூரத்தில் வைத்திருந்தார். இரு தலைவர்களிடமும் நட்பு பாராட்டி வந்தார்.
2017, டிசம்பர் 31 அன்று தான் அரசியலுக்கு வருவதாக நேரடியாக ரசிகர்கள் மத்தியில் ரஜினி அறிவித்தார். பின்னர் இரண்டாம் முறையாக எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ஏ.சி.சண்முகத்தின் கல்லூரி விழாவில் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது. அதை நான் நிரப்புவேன். நான் எம்ஜிஆர் ஆட்சியைத் தருவேன் என்று பேசினார்.
ஆனால் அதன் பின் மவுனமானார். இடையில் 2017-ம் ஆண்டில் மக்கள் மன்றப் பணிகள் வேகமெடுத்தன. இடையில் ரஜினி மன்ற நிர்வாகிகள் நியமனத்தில் காசு பார்ப்பதை அறிந்து, உடனடியாக அனைத்தையும் நிறுத்தினார்.
அதன் பின்னர் 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஜினியின் அரசியல் பிரவேசப் பேச்சு மீண்டும் வேகமெடுத்தது. ஜூலையில் அறிவிப்பு, செப்டம்பர், டிசம்பரில் மாநாடு, பிப்ரவரியில் வேட்பாளர் பட்டியல் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. ஆனால், கரோனா தொற்றுப் பரவலுக்கு முன் கடைசியாக லீலா பேலஸ் ஹோட்டலில் பேசிய ரஜினி, தான் அரசியல் கட்சி தொடங்குவது குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பேசினார்.
மக்கள் எழுச்சி ஒன்று உருவாகவேண்டும். அதன் பின்னர்தான் வருவேன் என்று பேசினார். அந்த எழுச்சியை மன்ற நிர்வாகிகள் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பின்னர் கரோனா வந்தது. 6 மாதம் உலகத்தையே முடக்கியது. அதனால் ரஜினியின் அரசியல் அறிவிப்பும் தள்ளிப்போனது.
நவம்பரில் ஜூம் மீட்டிங் என இடையில் பேச்சு அடிபட்டது. அதுவும் நடக்கவில்லை. ஆனால், சமூக வலைதளங்களில் ரஜினி எழுதியது போன்ற அறிக்கை ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலளித்த ரஜினி, அது தனது அறிக்கை அல்ல. ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள தனது உடல் நிலை, மருத்துவர்கள் ஆலோசனை அனைத்தும் உண்மைதான் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதே அறிக்கையில் ரஜினி, நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டார் ரஜினி என்ற பரவலான கருத்து எழுந்தது. ஆனால், தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவரது அரசியல் நண்பர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏற்கெனவே கடந்த மாதம் தனது நிலைப்பாட்டை மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என ரஜினி அறிவித்தபடி இன்று மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்துவதாக அறிவித்தார். அதன்படி இன்று காலை ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார்.
வீட்டிலிருந்து ரசிகர்கள் புடைசூழ மண்டபம் வந்தார் ரஜினி. அவர் வருவதற்கு முன்னரே மண்டபத்தில் நிர்வாகிகள் குவிந்தனர். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நிர்வாகிகளுக்கு ஏற்கெனவே கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுவிட்டது. மேடையில் ரஜினி மட்டுமே அமரும் ஒற்றை நாற்காலி போடப்பட்டது.
கீழே மன்ற நிர்வாகிகள் அமர ஒரு நாற்காலிக்கு இடையே ஒரு நாற்காலி எனப் போடப்பட்டது. ஆலோசனையைத் தொடங்கிய ரஜினி சரியாக 11.55 மணிக்கு முடித்தார். பின்னர் வீட்டுக்குச் செல்லும் அவர் அங்கு வைத்து பேட்டி அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.