

தமிழகத்தில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு வகுப்புகள், மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை வகுப்புகள் டிச.7 ஆம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேரும் மாணவர்களுக்கு 2021, பிப்.1 முதலே வகுப்புகள் தொடங்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவ. 30) வெளியிட்ட அறிக்கை:
"30.11.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது:
1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7.12.2020 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
2) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை, முதுநிலை வகுப்புகள்) 7.12.2020 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
எனினும், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் 1.2.2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.